சென்னை பெரம்பூர் இல்லத்தில் ஆம்ஸ்ட்ராங் உடல் – ‘ஜெய் பீம்’ முழக்கமிட்ட ஆதரவாளர்கள்

சென்னை: படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் உடல் ஒப்படைப்பு. இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் புடைசூழ சென்னை – பெரம்பூர் இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்கு அவரது உடலுக்கு உறவினர்கள் அஞ்சலி செலுத்துகின்றனர். அதன் பிறகு பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது. கட்சி அலுவலகத்தில் அவரது உடலை அடக்கம் செய்ய அனுமதி கோரி அவரது மனைவி பொற்கொடி தாக்கல் செய்த வழக்கு விசாரணை இன்று காலை நடைபெறுகிறது. இதனை நீதிபதி அனிதா சுமந்த் விசாரிக்கிறார்.

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் இருந்து கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் உடல் கொண்டு செல்லப்பட்டது. அப்போது திரண்ட அவரது ஆதரவாளர்கள் ‘வீரவணக்கம்’, ‘ஜெய் பீம்’ என முழக்கமிட்டனர்.



இந்த கொலை சம்பவம் தொடர்பாக, திருநின்றவூரைச் சேர்ந்த மூவர், காட்பாடியைச் சேர்ந்த இருவர் உட்பட 8 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் மேலும் மூன்று பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கான காரணத்தைக் கண்டறிந்து, சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், உத்தரவின் பேரில் கூடுதல் காவல் ஆணையர் (வடக்கு) ஆஸ்ரா கர்க், தலைமையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தீவிரமாக குற்றவாளிகளைத் தேடிவந்தனர். இதில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பாக, சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் கூறும்போது,
“கொலைக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இது அரசியல் காரணங்களுக்கான கொலை இல்லை. அதற்கான சாத்தியம் மிகவும் குறைவாகவே உள்ளது. அவர் ஆரம்ப வாழ்க்கையில் இருந்து அரசியலுக்கு வந்த பிறகு, சில நேரங்களில் அவருக்கு பிரச்சினை இருந்துள்ளது. அரசியல் காரணங்கள் தாண்டி, குழு ரீதியான பிரச்சினை இருந்துள்ளது. எனவே, அந்தக் கோணத்தில்தான் நாங்கள் விசாரித்து வருகிறோம். அரசியல் காரணங்களுக்கு மிகக் குறைவான வாய்ப்பே உள்ளது” என்றார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்: “பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியையும் பெரும் வருத்தத்தையும் அளிக்கிறது. கொலையில் சம்பந்தப்பட்டவர்களைக் காவல்துறை இரவோடு இரவாகக் கைது செய்திருக்கிறது. ஆம்ஸ்ட்ராங்கை இழந்து வாடும் அவரது கட்சியினர், குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, வழக்கை விரைவாக நடத்தி, குற்றவாளிகளுக்குச் சட்டப்படி உரிய தண்டனை பெற்றுத் தரக் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தலைவர்கள் கண்டனம்: திருமாவளவன் – ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு விசிக தலைவர் திருமாவளவன் நேரில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்த கொலையின் பின்னணியில் உள்ள உண்மையான குற்றவாளிகளை கண்டறிவதற்கு உரிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். இந்த கொலை வழக்கில் இப்போது சரண் அடைந்து இருப்பவர்கள், உண்மையான குற்றவாளிகள் இல்லை.

அந்தக் கொலையில் சம்பந்தப்பட்டவர்கள், அவர்களைத் தூண்டிவிட்டவர்கள், அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். ஆகவே, சரண் அடைந்தவர்களை கைது செய்துவிட்டோம் என்ற வகையிலே காவல் துறை புலன் விசாரணையை நிறுத்திக் கொள்ளக்கூடாது. இந்த கொலையின் பின்னணியில் இருந்தவர்கள், உண்மையான குற்றவாளிகள் யாரோ, அவர்களை கைது செய்ய வேண்டும் என்று பகுஜன் சமாஜ் , விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இங்கு திரண்டிருக்கும் அமைப்புகளின் சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம்” என்றார்.

எடப்பாடி பழனிசாமி: “ஒரு தேசிய கட்சியின் மாநிலத் தலைவர் பொறுப்பில் உள்ளவர் படுகொலை செய்யப்படுகிறார் எனில், இதற்கு மேல் இந்த திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கை என்னவென்று சொல்லி விமர்சிப்பது? எதன் மீதும் அச்சமற்ற நிலையில் தொடர்ச்சியாக குற்றங்கள் நடைபெறும் அளவுக்கு அவல நிலைக்கு சட்டம் – ஒழுங்கைத் தள்ளிய திமுக முதல்வருக்கு எனது கடும் கண்டனம்” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

ராமதாஸ்: “தமிழகத்தில் உளவுத் துறை செயலிழந்து விட்டது என்பதையே ஆம்ஸ்ட்ராங் படுகொலை காட்டுகிறது” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பிரேமலதா: “ஒரு தேசிய கட்சியின் தலைவரே வெட்டி கொலை செய்யப்படுகிறார் என்றால் இன்று சாமானிய மக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கின்றது என்ற கேள்வி அனைவரின் மனதில் மிக பெரிய பதட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது” என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா கண்டனம் தெரிவித்துள்ளார்.

செல்வப்பெருந்தகை: “அமைதிப் பூங்காவாக இருக்கிற தமிழகத்தில் இத்தகைய படுகொலைகளை வன்முறையாளர்கள் நிகழ்த்துவது மிகுந்த வேதனைக்குரியது. இதை வன்மையாக கண்டிக்கிறேன்” என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை: “நம் சமூகத்தில், வன்முறைக்கும் மிருகத்தனத்துக்கும் இடமில்லை. ஆனால் கடந்த 3 ஆண்டு கால திமுக ஆட்சியில், தமிழகத்தில் அதுவே வழக்கமாகி விட்டது. தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை சீர்குலைத்துவிட்டு, மாநிலத்தின் முதல்வராகத் தொடரும் தார்மீக உரிமை தனக்கு இருக்கிறதா என்று மு.க.ஸ்டாலின் தன்னையே கேட்டுக்கொள்ள வேண்டும்” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

கமல்ஹாசன்: “ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர் கூலிப் படையினரால், மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் படுகொலை செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறேன்,” என்று மநீம தலைவர் கமல்ஹாசன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

விஜய்: “பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை போன்ற கொடும் குற்றச் சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தமிழக அரசு தீவிரமாக முன்னெடுக்க வேண்டும். சமரசம் இல்லாமல் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி அனைவரது பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும்,” என்று தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.

மாயாவதி: பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி எக்ஸ் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள பதிவில், “பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங் நேற்று மாலை சென்னையில் அவரது வீட்டுக்கு வெளியே படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். அர்ப்பணிப்பும், கடின உழைப்பும் கூடிய தலைவர் அவர். அவரது படுகொலை நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மிகவும் வேதனைக்குரிய இச்சம்பவத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு ஞாயிற்றுக்கிழமை சென்னைக்கு நேரில் சென்று ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்த திட்டமிட்டுள்ளேன். அவருடைய குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்கவுள்ளேன். இத்தருணத்தில் அனைவரும் அமைதியையும், கட்டுப்பாட்டையும் கடைப்பிடிக்குமாறு வேண்டுகோள் விடுக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ராகுல் காந்தி: மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொடூரமான மற்றும் அருவருக்கத்தக்க வகையில் கொலை செய்யப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது குடும்பத்தினர், நண்பர்கள், ஆதரவாளர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக காங்கிரஸ் தலைவர்கள் மாநில அரசுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளனர். குற்றவாளிகள் விரைவில் சட்டத்தின் முன்பு நிறுத்தப்படுவதை அரசு உறுதி செய்யும் என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.