புதுடெல்லி: நடப்பு 2024 – 25 நிதியாண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட் ஜூலை 23-ம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்காக ஜூலை 22 முதல் ஆகஸ்ட் 12-ம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற இருக்கிறது. மோடி 3.0 அரசின் முதல் பட்ஜெட் இதுவாகும்.
இது குறித்து நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மத்திய அரசின் பரிந்துரையின் பெயரில், 2024-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடரை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கூட்டுவதற்கான முன்மொழிவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். இதன்படி, வரும் ஜூலை 22 முதல் ஆகஸ்ட் 12 வரை (நாடாளுமன்றத்தின் அலுவல் தேவைகளுக்கு உட்பட்டது) பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும்” என்று தெரிவித்துள்ளார்.
இந்தக் கூட்டத்தொடரில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான என்டிஏ அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்வார். முன்னதாக மக்களவைத் தேர்தலுக்கு முன்பு மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் பிப்ரவரி 1-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது நினைவுகூரத்தக்கது.
மத்திய அரசின் 2024-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மோடி 3.0 அரசின் கீழ் நிதியமைச்சர் வரி செலுத்துவோருக்கு சில சலுகைகள் அறிவிக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் ஊகங்களும் உருவாகியுள்ளன. அவ்வாறு எதிர்பார்க்கப்படும் நன்மைகளில் ஒன்று, நிலையான விலக்கு வரம்பு உயர்வு, இது நீண்ட காலமாக நிலுவையில் இருப்பதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.
மத்திய பட்ஜெட்டில் ஊகர வீட்டு வசதி திட்டத்தில் மாநில அரசுக்கான மானியங்களை அதிகரிக்க மத்திய அரசு தயாராகி வருகிறது. இது கடந்த ஆண்டை விட 50 சதவீதம் அதிகரித்து 6.5 பில்லியன் அமெரிக்க டாலர்களைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.