சியோல்,
தென்கொரியாவில் எதிர்க்கட்சியான லிபரல் டெமாக்ரடிக் கட்சி தலைவர் லீ ஜே-மியுங் (வயது 60). இவர் கடந்த ஜனவரி மாதம் தென்கிழக்கு பிராந்தியமான பூசான் நகரில் தேர்தல் பிரசாரத்துக்காக சென்றிருந்தார். பின்னர் அங்குள்ள விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது 60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் அவரிடம் கையெழுத்து கேட்பதுபோல் சென்று திடீரென கத்தியால் சரமாரியாக தாக்கினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். இதனையடுத்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் தீவிர சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினார்.
இதற்கிடையே அங்கிருந்த போலீசார் தாக்குதல் நடத்திய நபரை உடனடியாக கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் விசாரணை தற்போது முடிவடைந்த நிலையில் அவருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.