மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் கடந்த ஜூலை 3-ம் தேதி அன்று வரலாற்றில் முதன் முறையாக 80,000 புள்ளிகளைத் தாண்டியது, ஏழு மாதங்கள் என்ற மிகக் குறைவான காலத்துக்குள் மிக வேகமாக 10,000 புள்ளிகள் உயர்வை பதிவு செய்துள்ளது. இந்த 10,000 புள்ளி ஏற்றத்துக்கு இடையே, ஒரு சில பங்குகள் அசுர வளர்ச்சியும் குறிப்பிடத்தக்க சரிவையும் கண்டிருக்கிறது, அதிலும் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் பங்கு விலை மிக அதிகமாக உயர்ந்து , கிட்டத்தட்ட 75% வருமானத்தை அதன் முதலீட்டாளர்களுக்கு தந்திருக்கிறது,
பவர் கிரிட், அதானி போர்ட், ஏர்டெல் ஆகியவை 40%-க்கும் அதிகமாகவும், ஏசியன் பெயின்ட்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், டைட்டன், ஐடிசி மற்றும் இண்டஸ்இண்ட் பேங்க் ஆகியவை அதிக நஷ்டத்தையும் சந்தித்திருக்கின்றன. குறிப்பாக, 70,000 புள்ளிகள் முதல் 80,000 புள்ளிகள் வரை ஏற்றம் அடைவதற்கு 138 வர்த்தக தினங்களை மட்டுமே எடுத்துக்கொண்டுள்ளது சென்செக்ஸ்.
இந்நிலையில், மும்பையில் செக்யூரிட்டீஸ் மேல்முறையீட்டு தீர்பாய (Securities Appellate Tribunal) புதிய வளாகத்தை, கடந்த ஜூலை 4-ம் தேதி திறந்து வைத்து பேசிய இந்திய தலைமை நீதிபதி சந்திரசூட், பி.எஸ்.இ சென்செக்ஸின் 80,000 புள்ளிகள் மைல்கல்லைப் பற்றி, “பங்குச்சந்தை வர்த்தகம் வேகமாக உயர்வது மிகச் சந்தோஷமான தருணமாக இருப்பினும், இது போன்ற நிகழ்வுகள் ஒழுங்குமுறை அதிகாரிகளின் அவசியத்தை வலியுறுத்துகின்றன.
உலக அளவில் இந்திய பங்குச் சந்தை மிக முக்கியமானது என்பதால், இது போன்ற தருணத்தில் செபி, செக்யூரிட்டீஸ் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் ஆகியவை மிகவும் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். அதுமட்டுமல்லாமல் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டு, இந்திய பங்குச் சந்தை ஒரு நிலையானது என்பதை உறுதிப்படுத்த வேண்டும். முதலீட்டாளர்களும் கவனுமுடன் தங்களின் முதலீடுகளை கையாள வேண்டியது அவசியம். இந்திய பங்குச் சந்தைகளை பொறுப்புடன் அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு ஒழுங்குமுறை அமைப்புக்கு இருக்கிறது” எனத் தெரிவித்திருக்கிறார்.
மிக வேகமாக அதிகரிக்கும் நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் சந்தைகளைப் பார்த்து இந்திய முதலீட்டாளர்கள் சந்தோஷப்படுவது ஒருபுறம் இருந்தாலும், `இவ்ளோ வேகமா சந்தை மேல போகுதே… என்ன ஆகுமோ தெரியவில்லையே’ என்கிற கலக்கமும் கொண்டிருக்கிறார்கள்.
இதன் காரணமாக இந்த ஏற்றத்தைப் பயன்படுத்தி பலரும் தங்களின் பங்குகளை விற்றுவருவதாகத் தெரிகிறது. தினசரி பங்கு வர்த்தகர்களும், ஷார்ட் டைம் முதலீட்டாளர்களுக்கு இந்த ஏற்றம் பயனுள்ளதாக இருக்கலாம் என்றும், நீண்டகால அடிப்படையில் முதலீடு செய்திருக்கும் முதலீட்டாளர்கள் சந்தையின் போக்கில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களை நினைத்து கலக்கப்படத் தேவையில்லை என்பதும் பங்குச்சந்தை நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.