லூதியானா,
சீக்கியர்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக பஞ்சாப் சிவசேனா தலைவர் பட்டப்பகலில், பரபரப்பான சாலையின் நடுவில் வாளால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான பரபரப்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
பஞ்சாப் சிவசேனா தலைவர் சந்தீப் தாபர் லூதியானாவின் பரபரப்பான சாலையில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அவருடன் போலீஸ்காரர் ஒருவர் பாதுகாப்புக்காக வந்திருந்தார். அப்போது அங்கு வந்த நிஹாங் வீரர்கள் (நீல நிற உடையணிந்து, பாரம்பரிய ஆயுதங்களை ஏந்திய, சீக்கிய பிரிவைச் சேர்ந்த போர் வீரர்கள்) இருவர் அவரை வழிமறித்தனர். அவரிடம் ஏதோ கூறினர். பின்னர் தங்களிடம் இருந்த வாளால் அவரை தாக்கினர்.
தடுக்க முயன்ற போலீஸ்காரரை அங்கு வந்த மற்றொருவர் சாலையின் ஓரத்திற்கு அழைத்துச் சென்றார். இதையடுத்து அந்த இரண்டு நிஹாங் வீரர்களும் சந்தீப் தாபரை வாளால் கடுமையாக தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த அவர் ஸ்கூட்டருடன் சாலையில் விழுந்தார். பின்னர் அவர்கள் இருவரும் அந்த ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.
ரத்த வெள்ளத்தில் இருந்த சந்தீப் தாபர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். தற்போது அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. காலை 11.40 மணியளவில் ஒரு அறக்கட்டளை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திரும்பிக் கொண்டிருந்த சந்தீப் தாபரை, சீக்கியர்களுக்கு எதிரான அவரது சர்ச்சைக்குரிய கருத்துகள் குறித்து கோபமடைந்த நிஹாங் வீரர்கள் தாக்கியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில், மாலையில் மூன்று குற்றவாளிகளும் அடையாளம் காணப்பட்டு அவர்களில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஸ்கூட்டரும் மீட்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வீடியோவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள சிரோமணி அகாலி தளம் தலைவர் ஹர்சிம்ரத் கவுர் படேல், இந்த சம்பவம் பஞ்சாபில் சட்டம்-ஒழுங்கு நிலை முற்றிலும் சரிந்துள்ளதைக் காட்டுகிறது என்று தெரிவித்துள்ளார். மேலும் முதல்-மந்திரி பகவந்த்மான் உறக்கத்தில் இருந்து விழித்து, உடனடியாக சரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.