கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே ஜெக்கேரி இருளர் காலனியை சேர்ந்த கூலித் தொழிலாளி மாதையன். இவரின் முதல் மனைவி முனியம்மா. இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். பின்னர் சின்னம்மா என்பவரை மாதையன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 12 வயதில் மகன் மற்றும் இரு மகள்கள் உள்ளனர். இதனிடையே மீண்டும் கர்ப்பமான சின்னமாவுக்கு கடந்த 14 நாள்கள் முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது. தொடர்ந்து 3வது பெண் குழந்தை பிறந்ததால் அந்த குழந்தையை கொன்று விடலாம் என மாதையன் நேற்று முன்தினம் மாலை சின்னமாவிடம் கூறியுள்ளார். இதற்கு சின்னமா மறுப்பு தெரிவித்ததால் அவரைத் திட்டி தள்ளிவிட்டு குழந்தையை தூக்கிக்கொண்டு மாதையன் வெளியே ஓடி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சின்னம்மா அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் அவரை பின்தொடர்ந்து தேடிச் சென்றார்.
ஆனால் அவர் எங்கு சென்றார் என கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் இரவு 9 மணிக்கு மாதையன் தனது வீட்டின் அருகே உள்ள பாறை மீது குழந்தையை வீசிவிட்டு சென்றுள்ளார். இதை கவனித்த சின்னம்மா விரைந்து சென்று பார்த்த போது குழந்தை பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்தது. அதன் கன்னத்தில் காயங்களும் இருந்தது உடனடியாக குழந்தையை எடுத்துக்கொண்டு கெலமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றார். அங்கு பரிசோதித்த மருத்துவர் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த கெலமங்கலம் போலீஸார் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் அந்த குழந்தையை மாதையன் அடித்து கொலை செய்தது தெரியவந்தது. இதனை அடுத்து கொலை வழக்கு பதிவு செய்த கெலமங்கலம் போலீஸார் மாதையனை நேற்று கைது செய்தனர். மூன்றாவதாக பிறந்த பச்சிளம் பெண் குழந்தையை தந்தையே அடித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88