தொடர் வேட்டையாடுதலாலும், சூழலியல் காரணங்களாலும், இந்தியாவில் சிவிங்கிப்புலிகளின் எண்ணிக்கை குறைந்துவந்தன. கடந்த 1952-ம் ஆண்டோடு இந்தியாவில் சிவிங்கிப்புலி இனம் முற்றிலும் அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 2022-ம் ஆண்டு சிவிங்கிப்புலிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில், வெளிநாடுகளிலிருந்து கொண்டு வர முயற்சி எடுக்கப்பட்டது. அதன்படி முதற்கட்டமாக 8 சிவிங்கிப்புலிகள் நமீபியாவிலிருந்து இந்தியாவிற்குக் கொண்டுவரப்பட்டன. அதில் ஐந்து பெண் மற்றும் மூன்று ஆண் சிவிங்கிப்புலிகள் இருந்தன. அவை மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள குனோ தேசியப் பூங்காவில் விடப்பட்டன.
அதில் ஒரு பெண் சிவிங்கிப்புலி கடந்த ஜனவரி மாதம் இறந்தது. அடுத்த கட்டமாக 12 சிவிங்கிப்புலிகள், தென்னாப்பிரிக்காவிலிருந்து கடந்த ஜனவரி மாதம் குனோ தேசியப் பூங்காவிற்குக் கொண்டு வரப்பட்டன. அதில் ஏழு சிவிங்கிப்புலிகளும், இந்தியாவில் பிறந்த மூன்று குட்டிகளும் உயிரிழந்தன. இந்நிலையில் ‘காமினி’ என்று பெயரிடப்பட்ட பெண் சிவிங்கிப்புலி, சில தினங்களுக்கு முன்பு ஐந்து குட்டிகளை ஈன்றெடுத்துள்ளது. அது தன் குட்டிகளைக் கொஞ்சும் வீடியோவைப் பகிர்ந்த மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ், “தென்னாப்பிரிக்காவின் ஸ்வாலு கலஹாரி சரணாலயத்திலிருந்து கொண்டுவரப்பட்ட சுமார் 5 வயதுடைய பெண் சிவிங்கிப்புலி காமினி, 5 குட்டிகளை ஈன்றுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் பிறந்த சிவிங்கிப்புலிக் குட்டிகளின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.” எனக் கூறியுள்ளார்.