Gaganachari: "ராம் படத்துல நடிக்கிறேன்; ஹெச்.வினோத்கிட்ட வாய்ப்பு கேட்டுருக்கேன்" – அஜு வர்கீஸ்

அஜு வர்கீஸ்… மலையாள சினிமாவில் மிகவும் பரிச்சயமான பெயர். 120 படங்களுக்கு மேல் நடித்தவர். குணச்சித்திரக் கதாபாத்திரங்கள், நகைச்சுவை கதாபாத்திரங்கள், முதன்மை கதாபாத்திரம் என தன்னை ஒரு ஜோனுக்குள் நிறுத்திக்கொள்ளாமல் இயங்கும் பன்முக கலைஞன். தயாரிப்பாளரும் கூட. அண்மையில் அவர் நடிப்பில் மலையாலத்தில்  வெளியான ‘ககனசாரி’ திரைப்படம் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இப்போது தமிழில் வெளியாகியிருக்கிறது. அதன் ப்ரமோஷனுக்காக சென்னை வந்திருந்த அஜு வர்கீஸிடம் நிகழ்ந்த உரையாடலில் இருந்து…

‘ககனசாரி’ படத்தை இப்போ தமிழ்ல ரிலீஸ் பண்றீங்க. இதுல ‘மாக்குமென்ட்ரி’னு புது விஷயத்தை சொல்லிருக்கீங்க. அப்படினா என்ன ? இது எப்படியான படமா இருக்கும்?

“இந்தப் படம் முழுக்க முழுக்க ஒரு எண்டர்டெயினர். அதே சமயம், இது ஒரு புது முயற்சி. கோவிட் இருந்த சமயத்துல என்ன பண்ணப் போறோம்னு ஐடியாவே இல்லை. ஷூட்டிங்கிற்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகள். அப்போ ரொம்ப குறைவான நபர்களை வெச்சு ஒரு சினிமா பண்ணலாம்னு யோசிக்கும்போது, இயக்குநர் அருண் சந்து இந்த ஐடியாவை சொன்னார். 2050கள்ல உலகமே அழிவை நோக்கி போய்க்கிட்டு இருக்கிற சூழல்ல ஒரு ஏலியன் வந்தா எப்படி இருக்கும் அதுதான் படம். இதை சீரியஸா இல்லாமல் காமெடியா  சொல்லியிருக்கோம். ‘டாக்குமென்ட்ரி’ எல்லோரும் கேள்விப்பட்டிருப்போம், பார்த்திருப்போம். அது நடந்த, நடந்துக்கிட்டு இருக்கிற ஒரு விஷயத்தை ஆவணப்படுத்துறது. ‘மாக்குமென்ட்ரி’ங்கிறது இன்னும் நடக்காத ஒரு விஷயத்தை முழுக்க முழுக்க கற்பனையா சொல்றதுதான் ‘மாக்குமென்ட்ரி’. எனக்கு தெரிஞ்சு கேரள சினிமாவுல இதுவரை பார்க்காத விஷயம்னு நினைக்கிறேன்”

இயக்குநர் அருண் சந்து இயக்கிய மூன்று படங்களிலுமே நீங்க இருக்கீங்க. உங்களுக்கும் அவருக்குமான நட்பு பத்தி ?

அஜு வர்கீஸ்

“நான், அருண் சந்து எல்லோரும் வினித் ஶ்ரீனிவாசன் டீம். ‘தட்டத்தின் மறயத்து’ படத்துடைய போஸ்டர் டிசைனர் அருண். அப்போதிலிருந்து தெரியும். நல்ல வாசிப்பாளன். சயின்ஸ் ஃபிக்‌ஷன், காஸ்மிக்ஸ், சோலார் சிஸ்டம்னு முழுக்க முழுக்க அறிவியல் ரீதியா படிச்சுக்கிட்டே இருப்பார். எதையும் வித்தியாசமா யோசிக்கிற மனுஷன். கடந்த இரண்டு வருடங்களாக வித்தியாசமான சிந்தனைகளை கேரளா மக்கள் வரவேற்க தொடங்கியிருக்காங்க. கமர்ஷியலா வொர்க்காகுது. இந்தப் படம் 2021ல ஷூட் பண்ணினது. ஆனா, எங்களுக்கு ரிலீஸ் தாமாதமாச்சு. காரணம், உலக அளவுல நிறைய சர்வதேச திரைப்பட விழாக்கள்ல 25 விருது வாங்குச்சு. லாக்டெளனுக்கு  பிறகு, மக்கள் ரசனை மாறியிருக்கு. வித்தியாசமான ஐடியா உடைய படங்களை மக்கள் கொண்டாடுறாங்க. ரொம்ப சரியான சமயத்துலதான் இந்தப் படம் வெளியாகுதுனு சந்தோஷமா இருக்கு”

சென்னையில காலேஜ் படிச்ச நாள்களை பத்தி சொல்லுங்க. 

“ஆமா! இங்க OMRல இருக்கிற KCG காலேஜ்லதான் படிச்சேன். நான், வினித் ஶ்ரீனிவாசன் எல்லோரும் க்ளாஸ்மேட்ஸ். என் வாழ்க்கையில என் மனசுக்கு ரொம்ப நெருக்கமான சிறந்த நாள்கள் அவை. அது தனி உணர்வு. வினித்துடைய எல்லா படங்களிலும் சென்னை சார்ந்தோ தமிழ் சார்ந்தோ சில விஷயங்கள் நிச்சயமா இருக்கும். அவருடைய பெரும்பாலான படங்கள்ல நான் இருப்பேன். அதனால, எங்களை கேரளாவுல ‘சென்னை பாசம்’னு ட்ரோல் பண்றாங்க. நாங்க எல்லாம் அதை பார்த்து சிரிச்சுட்டு இருப்போம். காலேஜ் தாண்டி நான் இங்க பார்த்த படங்கள். ‘சாமி’, ‘பாய்ஸ்’, ‘வேட்டையாடு விளையாடு’னு  அந்த சமயத்துல எல்லா தமிழ் படங்களையும் தியேட்டர்ல  பார்த்திடுவோம். எப்போ சென்னை வந்தாலும் தனி ஃபீல் தான்”

120க்கும் மேற்பட்ட படங்கள்ல குணச்சித்திரம், நகைச்சுவை, ஹீரோனு எல்லாமே பண்றீங்க. கரியர் நிறைவா இருக்கா ?

அஜு வர்கீஸ்

“நான் காலேஜ்ல செகண்ட் இயர் படிக்கும்போதுதான், சினிமாதான் எனக்கு ரொம்ப பிடிக்குது, அதுக்குள்ள போகணும்னு தோணுச்சு. மம்மூட்டி சார், மோகன்லால் சார், நெடுமுடி வேணு சார், ஜெகதி ஶ்ரீகுமார் சார், லலிதா அம்மா தமிழ்ல ரஜினி சார், கமல் சார், கவுண்டமணி சார், வடிவேலு சார், இளையராஜா சார், ரஹ்மான் சார் இவங்க எல்லோரும்தான் இன்ஸ்பிரேஷன். சினிமாவுக்குப் போறேன்னு வீட்ல சொல்லிட்டேன். சினிமாவுல ஏதாவது பண்ணணும்னு சுத்திட்டு இருந்த சமயத்துல வினித்தும் நானும் நிறைய பேசுவோம். எனக்கும் கதை எழுதணும், இயக்குநராகணும்னு ஆசை. நடிக்க வாய்ப்பு அமைஞ்ச பிறகு, அதுல கவனம் செலுத்திட்டு இருந்தேன்.

‘மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப்’ல ஆரம்பிச்ச பயணம் தொடர்ந்துக்கிட்டு இருக்கு. இடையில அவருடைய ‘ஜேக்கபின்டே ஸ்வர்கராஜ்யம்’ படத்துல உதவி இயக்குநரா வினித்கிட்ட வேலை செஞ்சேன். ரொம்ப சிரமமா இருந்தது. அதுக்கு பிறகு, இயக்குநராகணுங்கிற ஆசையே போயிடுச்சு. இதுவே நடிக்கும்போது எவ்வளவு சிரமங்கள் இருந்தாலும் மீண்டும் மீண்டும் பண்ண தோணுது. அப்போ, நமக்கு கிடைச்சிருக்கிற  வாய்ப்பை சரியா பயன்படுத்திக்கணும்னு நினைச்சு பண்ணிட்டு இருக்கேன் சந்தோஷமா நிறைவா பண்றேன். நிறைய கத்துக்கிறேன்”

உங்களுக்கு கனவு ரோல்னு ஏதாவது இருக்கா ?

அஜு வர்கீஸ்

“கனவு ரோல்னு இல்லை. நடிப்புல கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு. எல்லா பாவனைகளையும் நல்லா கடத்தி நேர்த்தியான நடிகான இருக்கணும். அஜுவை நம்பி ஒரு கேரக்டர் கொடுக்கலாம்னு இயக்குநர்கள் நினைக்கிற நடிகனா இருக்கணும். அது போதும். லீட் ரோல்ல படங்கள் நடிக்கணும்னு எல்லாம் எண்ணமோ ஆசையோ இல்லை. ஒரு நடிகனா என் மேல எனக்கு நம்பிக்கை ரொம்ப கம்மி. அதெல்லாம் உடைச்சு எனக்கு என் மேல தைரியமும் நம்பிக்கையும் வந்தால்தான் எல்லா எமோஷன்களையும் நேர்த்தியா பண்ணக் கூடிய நடிகனாவேன். சோகம்னா ஒரே எமோஷன்தான் வருது. ஸ்டாக் எமோஷன்கள் வெச்சு நடிச்சிட்டு இருக்கேன். முறையா நடிப்பு கத்துக்கிட்டோ அது ரொம்ப திறமையான நடிகனாவோ இருந்தால் அவங்களுக்கு இந்த பிரச்னை இருக்காது. நான் அப்படியில்லை. அதனால, நான் தொடர்ந்து நடிச்சு நடிச்சுதான் கத்துக்கிறேன், கத்துக்கிட்டிருக்கேன்”

மலையாள சினிமாவை மற்ற மொழி மக்கள் கொண்டாடுறாங்க. இதை பார்க்கும்போது எப்படியிருக்கு ?

“ரொம்ப சந்தோஷமா இருக்கு. எப்போவும் மலையாள சினிமாவுக்கு தனித்துவம் இருக்குனு நினைக்கிறேன். மலையாள சினிமாவின் கோல்டன் டேஸ் 80ஸ்தான். இங்க பாரதிராஜா சார், பாலு மகேந்திரா சார், பாக்யராஜ் சார், கமல்ஹாசன் சார் படங்கள் எல்லாம் எப்படி க்ளாஸிக்ஸோ அது மாதிரி எங்க ஊர்லயும் நிறைய க்ளாஸிக் படங்கள் இருக்கு. அடிப்படை சரியா இருக்கும்போது அதிலிருந்து புதுப்புது விஷயங்கள் வருது. இதற்கிடையில தலைமுறை மாறுது, மக்கள் ரசனை மாறுது. அதனால, சினிமாவுல  மாற்றங்கள் ஏற்படுது. அதன் வெளிப்பாடுதான் நடந்துக்கிட்டு இருக்கு.

நிறைய திறமையான இயக்குநர்களும் கதாசிரியர்களும் தொலைநோக்கு பார்வையுடையவங்க வர்றாங்க. சமீபமா பார்த்தா, ‘பிரம்மயுகம்’, ‘மஞ்சும்மல் பாய்ஸ்’, ‘பிரேமலு’, ‘ஆவேஷம்’னு நிறைய இளம் இயக்குநர்கள் கலக்குறாங்க. இப்படியான சூழல்ல நான் மலையாள சினிமாவுல இருக்கிறது ரொம்ப சந்தோஷம். மலையாள சினிமாவின் பொற்காலத்தை மீண்டும் கொண்டு வர முயற்சி பண்ணிட்டு இருக்கோம்”

தமிழ் சினிமாவை எப்போதிலிருந்து தொடர்ந்து பார்க்க ஆரம்பிச்சீங்க ? யாருடைய வொர்க் ரொம்பப் பிடிச்சிருக்கு?

அஜு வர்கீஸ்

“‘சிங்காரவேலன்’, ‘நாட்டாமை’ மாதிரி ஹிட்டான தமிழ் படங்களை தியேட்டர்ல பார்த்திருக்கேன். தொடர்ந்து தமிழ் சினிமாவை ஃபாலோ பண்ண ஆரம்பிச்சது, ‘சுப்ரமணியபுரம்’, ‘நாடோடிகள்’ வந்த சமயத்துலதான். அப்போ நான் சென்னையில  படிச்சுட்டும் இருந்தனால எல்லா படங்களும் பார்க்க ஆரம்பிச்சேன். ‘கண்கள் இரண்டால்’ சென்சேஷன். யதார்த்த படங்கள் நிறைய வர தொடங்கிய சமயம். வெற்றிமாறன் சார் படங்கள் ரொம்பப் பிடிக்கும். மிஷ்கின் சாருடைய ‘சித்திரம் பேசுதடி’, ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’, ‘யுத்தம் செய்’னு எல்லாமே புதுப்புது ஐடியாக்கள். இதெல்லாம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கு”

வினித் ஶ்ரீனிவாசன், பசில் ஜோசப், ஜூட் ஆண்டனி ஜோசப்னு உங்க நண்பர்கள் இயக்குற படங்கள் எல்லாத்திலும் நீங்க இருக்கீங்க. சினிமாவும் நண்பர்களும்… 

“எனக்கு சினிமா கிடைச்சதே நண்பர்களாலதான். அவங்க இல்லைனா நான் இல்லை. வினித் ஶ்ரீனிவாசன்தான் எனக்கு முதல் வாய்ப்பு கொடுத்தான். நான் நடிச்ச 120 படங்கள்ல பாதிக்கு பாதி என் நண்பர்கள் கூடதான். நான் சினிமாவுல நடிக்க ஆரம்பிச்ச கொஞ்ச நாள்ல ஷார்ட் ஃபிலிம் ட்ரெண்ட் வந்தது. அப்போ ஷார்ட் ஃபிலிம் நிறைய பண்ண ஆரம்பிச்சேன். காரணம், நடிச்சு பழகணும், கத்துக்கணும். அப்போதான் பசில் ஜோசப் (‘கோதா’, ‘குஞ்சிராமாயணம்’,’மின்னல் முரளி’), ஜூட் ஆண்டனி (‘ஓம் ஷாந்தி ஹோசானா’, ‘2018’), விபின் தாஸ் (‘ஜெய ஜெய ஜெய ஜெய ஹே’, குருவாயூர் அம்பலநடையில்’), மிதுன் மேனுவல் தாமஸ் (‘அர்ஜெண்டினா ஃபேன்ஸ் காட்டூர்கடவு’, ‘அஞ்சாம் பாதிரா’, ‘ஆப்ரஹாம் ஓஸ்லர்’) கணேஷ் ராஜ் (‘ஆனந்தம்’) இவங்க  எல்லோரும் பழக்கமானாங்க. செம டேலன்ட்ஸ். அவங்க ஷார்ட் ஃபிலிம் நடிச்சது ரொம்ப உதவியா இருந்தது.”

தமிழ்ல யார் இயக்கத்துல நடிக்கணும்னு ஆசை ?

“நிறைய பேர் இருக்காங்க. ‘பசங்க’ எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச படம். ராம் சார் இயக்கத்துல மிர்ச்சி சிவா நடிச்சிருக்கிற படத்துல நான் நடிச்சிருக்கேன். அது எனக்கு ரொம்ப சந்தோஷம். அவர் சிந்தனையே வேற மாதிரி இருக்கு. நிவின் பாலி மூலமா கிடைச்ச வாய்ப்பு அது. ஹெச்.வினோத் சாருடைய ‘சதுரங்க வேட்டை’, ‘தீரன்’ என் ஆல்டைம் ஃபேவரைட். அப்போதிலிருந்து அவர்கிட்ட வாய்ப்பு கேட்டுக்கிட்டிருக்கேன். தமிழ்ல இருந்து யார் கூப்பிட்டாலும் நடிப்பேன்”

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.