டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணி உடனடியாக ஜிம்பாப்வே சுற்றுப் பயணம் செய்துள்ளது. கேப்டன் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி அந்த அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. ஹராரே மைதனாத்தில் இன்று நடைபெற்ற முதலாவது போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது. ஜிம்பாப்வே அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டாஸ் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் பந்துவீசுவதாக அறிவித்தார். அதன்படி பேட்டிங் ஆடிய ஜிம்பாப்வே அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கிளைவ் மண்டானே 25 பந்துகளில் 29 ரன்கள் எடுத்தார்.
இதனையடுத்து இந்திய அணி இரண்டாவது பேட்டிங் ஆடியது. எளிதான இலக்கு என்பதால் இந்திய அணி 15 ஓவர்களில் எல்லாம் அடித்துவிடும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், இந்திய அணியின் இளம் வீரர்கள் கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல் விளையாடினர். களத்துக்கு வருவதும் போவதுமாகவே இருந்தனர். டாப் ஆர்டரில் அபிஷேக் சர்மா, ரிங்கு சிங் ஆகியோர் டக் அவுட்டாகி வெளியேறினர். கேப்டன் கில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க ருதுராஜ் கெய்க்வாட் 7 ரன்களுக்கும், ரியான் பராக் 2 ரன்களுக்கும் விக்கெட்டை பறிகொடுத்தனர். 28 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை விட்டு ஆரம்பத்திலேயே சிக்கலில் சிக்கிக் கொண்டது இந்தியா.
பின்வரிசையில் ஆடிய துருவ் ஜூரல் 6 ரன்களுக்கு ஆட்டமிழக்க இந்திய அணியின் தோல்வி பாதை உறுதியானது. இருப்பினும் வாஷிங்டன் சுந்தர் 27 ரன்கள் எடுத்து இறுதியில் நம்பிக்கை கொடுத்தாலும் அவரால் வெற்றி இலக்குக்கு அணியை அழைத்துச் செல்ல முடியவில்லை. இதன்மூலம் முதன்முதலாக சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டியில் தோல்வியை தழுவியது. இத்துடன் இந்திய அணியின் டி20 போட்டிகளில் பெற்றுவந்த தொடர் வெற்றிகளும் முடிவுக்கு வந்தது. கடந்த 12 இருபது ஓவர் போட்டிகளில் இந்திய அணி தொடர்ச்சியாக வெற்றி பெற்றிருந்தது.
தோல்வி குறித்து பேசிய கேப்டன் சுப்மன் கில், “பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டது போல் பேட்டிங்கில் சிறப்பாக விளையாடவில்லை என்றார். பேட்டிங்கின் முதல் பாதிக்குள்ளாகவே 5 முக்கிய விக்கெட்டுகளை இழந்தது தோல்விக்கு மிக முக்கிய காரணமாக இருந்தது. களத்தில் நிலைத்து நின்று ஆட வேண்டும் என பேட்ஸ்மேன்களுக்கு அறிவுறுத்தியிருந்தபோதும், திட்டம் சரியாக செயல்படுத்த முடியவில்லை. 115 ரன்கள் சேஸிங் செய்யும்போது 10வது பேட்டரை நம்புகிறோம் என்றாலே ஏதோ பிரச்சனை இருக்கிறது என்று தான் அர்த்தம். அதனால் அடுத்த போட்டியில் கம்பேக் கொடுக்க முயற்சிப்போம்” என தெரிவித்தார்.