இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கிற ‘இந்தியன் 2’ திரைப்படம் வருகிற ஜூலை 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
இதற்கான புரோமோஷன் பணிகளில் படக்குழுவினர் தற்போது பரபரப்பாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகர் கமல் ஹாசன், நடிகர் சித்தார்த், இயக்குநர் ஷங்கர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வில் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த நடிகர் கமல் ஹாசன், “ஒரு விஷயத்திற்குப் புறப்படும்போது நிறைய தடங்கல்கள் வரும். அதே மாதிரி இந்தப் படத்துக்கும் பிரச்னைகள் வந்தன. முந்தைய நாள் எங்கக்கூட நல்லா பேசிட்டு இருந்தவங்க அடுத்த நாள் இல்லை. இப்படியான உயிரிழப்புகள் நடந்தன. இந்தப் படத்துல இயக்குநர் பல விஷயங்கள் அலங்காரத்துக்காக வைக்கல. அவர் நடிகர்களுக்குச் சாதகமாக எதுவும் பண்ண மாட்டாரு. கதைக்கு சாதகமாகதான் அத்தனை விஷயங்களையும் பண்ணுவாரு.” எனப் பேசியவரிடம் இந்த தலைமுறை நடிகர்களுடன் சேர்ந்து பணியாற்றிய அனுபவம் குறித்து கேள்வி எழுப்பினார்கள்.
அதற்கு பதிலளித்த கமல், “இந்த இரண்டாம் தலைமுறை என்னைவிட அதிகமாக கனவு காண்பவர்கள். நான் சின்ன வயசுல என் வீட்டுக்குப் பின்னாடி இருந்த கே.பி.சுந்தராம்பாள் அம்மாகிட்ட ‘பழம் நீ அப்பா’ பாடடெல்லாம் பாடி காமிச்சிருக்கேன். இந்த படத்துக்கு பயங்கரமாக செட் போட்டாங்க. முதல் நாள் செட்டுக்கு போனதும் அதை ரசிக்க விடாம எனக்கு முழுசா இந்தியன் தாத்தா மேக்கப் போட்டுவிட்டாரு.” எனப் பேசிய அவரிடம் நடிகர் சித்தார்த் “ஒரு மேடையில நீங்க இந்தியன் 3-ம் பாகத்துடைய ரசிகன்னு சொல்லியிருந்ததை எல்லோரும் தவறாக புரிஞ்சுகிட்டாங்க” என கமல் ஹாசனிடன் கூறினார்.
இதற்கு கமல், “அந்த விஷயத்துனால ஷங்கர் ‘என்ன சார் இப்படி பண்ணிட்டீங்க’னு கேட்க வச்சுட்டாங்க. இந்த விஷயம் அம்மா, அப்பா பிடிக்குற மாதிரிதான். ஒரு படத்துல ஒரு சீன் பிடிச்சுட்டா மத்த சீன் பிடிக்கலைனு கிடையாது. இந்தியன் 3 படத்தை நானா எடுக்க சொன்னேன். அதுவாக உருவாகுச்சு. எனக்கு அது மேல ஆசை வந்துச்சு. சம்பார், ரசம் நல்லா இருக்கு. என் மனசு பாயாசத்துக்கு அலைபாயுது. அது மாதிரி எனக்கு பிடிச்ச விஷயங்கள் இந்தியன் 3 திரைப்படத்திலும் இருக்கு.” என்றார்.
இதற்கிடையில் சென்சார் போர்ட் குறித்தான கேள்விக்கு இயக்குநர் ஷங்கர் சென்சார் போர்ட் படத்தில் வரும் தகாத வார்த்தைகளை மியூட் செய்தது குறித்து கூறினார். அதற்கு கமல் ஹாசனும், “நான் சின்ன வயசுல தகாத வார்த்தைகள் வச்சு கவிதை எழுதிட்டேன்.
இந்த விஷயம் என் தகப்பனார் வரைக்கு போயிடுச்சு. அவர் ‘நீ டாக்டருக்குப் படி, அப்போதான் அந்த வார்தைகளெல்லாம் உனக்கு பாடமாகும்’னு சொன்னாரு. உறுப்புகள் பெயர்தான் தகாத வார்த்தை. ஜெயகாந்தன் மாதிரியான எழுத்தாளர்கள் தன்னுடைய கதாபாத்திரங்களை ஆழமாக பதிவு செய்யுறதுக்கு இந்த தகாத வார்த்தைகள் பயன்பட்டுச்சு.” என்றார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த இயக்குநர் ஷங்கர், “முதன் முதல்ல இந்த சேனாபதி கதாபாத்திரத்துக்காக கலை இயக்குநர் தோட்டா தரணிகிட்ட ஒரு ஸ்கெட்ச் கேட்டேன். அந்த சமயத்துல அவர் மேக்கப் போட்டுட்டு வரும்போது இருந்த அதே சிலிர்ப்பு இந்தியன் 2 சமயத்துலேயும் வந்துச்சு. எனக்கு இந்தியன் தாத்தாதான் செட்ல இருக்காருன்னுதான் தோணும்.
சென்சார் போர்ட்ல நான் சில காட்சிகளை கட் பண்ணினால் அதனுடைய பீல் போயிடும்னு சொன்னேன். அதுக்கு அவங்க ‘படம் நல்லா வந்திருக்கு குடும்பத்தோட பார்ப்பாங்க’னு சொன்னாங்க. நான் முதல் பாகம் பண்ணும்போது இரண்டாம் பாகம் பண்ணுவேன்னு யோசிக்கல. முதல் பாகத்தோட ஒரு காட்சில வயசை காமிச்சுட்டோம். இப்போ இந்தியன் 2 இவ்ளோ வருஷம் கழிச்சு பண்ணுவேன்னு நினைக்கல.
இப்போ இதை வச்சு பல கேள்விகள் வருது. மார்சியல் ஆர்ட்ஸ் வீரர் ஒருவருக்கு 118 வயசு. அவர் அந்த கலையில கிராண்ட் மாஸ்டர். அதே மாதிரிதான் சேனாபதியும். முதல் பாகம் மாதிரி இல்லாம ப்ராஸ்தெடிக் மேக்கப் நல்லா வந்துருக்கு. பலரும் பழைய இந்தியன் தாத்தா மாதிரி இல்லைனு சொன்னாங்க. முதல் பாகத்துல மேக்கப் ரொம்ப இருந்ததுனால நடிகரை பெருசா பார்க்க முடியல. இந்த படத்துல நான் நடிகரை அதிகமாக பார்க்கணும்னு திட்டமிட்டேன். இந்த படத்துல பல கதாபாத்திரங்கள், கேமியோக்கள் இருக்கு. குடும்பங்களுக்கான பல விஷயங்கள் இந்த படத்துல இருக்கு. கார்ட்டூனிஸ்ட் ஆர். கே. லட்சுமணனுடைய காமன் மேன் கார்ட்டூனை கதை சொல்லும் கருவியாக பயன்படுத்தியிருக்கோம்.” என்றார்.