பீகாரில், பாம்புக் கடிக்கு ஆளான ரயில்வே ஊழியர் ஒருவர், அந்தப் பாம்பைத் திருப்பிக் கடித்ததில் பாம்பு உயிரிழந்திருக்கிறது.
இந்தச் சம்பவம் குறித்து வெளியான தகவலின்படி, சந்தோஷ் லோஹர் என்று அறியப்படும் ரயில்வே ஊழியர் பீகாரிலுள்ள ரஜௌலியின் அடர்ந்த வனப் பகுதியில் ரயில் தண்டவாளம் அமைக்கும் குழுவில் ஒரு பகுதியாக இருக்கிறார்.
கடந்த செவ்வாய்கிழமை வேலை முடிந்து இரவு முகாமில் தூங்கிக் கொண்டிருந்த சந்தோஷை பாம்பு கடித்திருக்கிறது. பின்னர், தன்னைக் கடித்த பாம்பை திருப்பிக் கடித்தால் விஷம் பாம்புக்கு மாறி உயிர்பிழைத்துவிடலாம் என்ற உள்ளூர் கட்டுக்கதையை நம்பிய சந்தோஷ், பதிலுக்கு அந்த பாம்பைக் கடித்தார்.
அதைத்தொடர்ந்து, சந்தோஷின் சக ஊழியர்கள் உடனடியாக அவரை ராஜவுலி துணைப் பிரிவு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஒருவழியாக மருத்துவ சிகிச்சை மூலம் உயிர்பிழைத்த சந்தோஷ் இரவு முழுவதும் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்து அடுத்தநாள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அதேசமயம், அவரைக் கடித்தது என்ன வகையான பாம்பு என்று தெரியவில்லை என சிகிச்சையளித்த மருத்துவர் தெரிவித்திருக்கிறார். இன்னொருபக்கம், சந்தோஷ் திருப்பிக் கடித்த பாம்பு பரிதாபமாக உயிரிழந்துவிட்டது.
முன்னதாக, உத்தரப்பிரதேசத்தில் கடந்த மாதம் மூன்று முறை மற்றும் இந்த மாதம் இரண்டு முறை என ஐந்து முறை பாம்பு கடிக்குள்ளான ஒருவர் ஐந்து முறையும் உயிர்பிழைத்தது மருத்துவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. தற்போது அவரின் உடல்நிலையும் சீராக இருக்கிறது.