குவாஹாட்டி: கடந்த ஜூன் மாதத்தில் இருந்து அசாமில் கனமழை பெய்து வருகிறது. பிரம்மபுத்திரா, பராக் நதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அசாம் மாநிலத்தில் மொத்தமுள்ள 35 மாவட்டங்களில் 30 மாவட்டங்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளன. 3,533 கிராமங்கள் முழுமையாக வெள்ளத்தில் மூழ்கி உள்ளன.
கடந்த ஜூன் மாதம் முதல் இதுவரை வெள்ள பாதிப்புகளால் 64 பேர் உயிரிழந்துள்ளனர். 24லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். சுமார் 50,000-க்கும் மேற்பட்டோர் வீடு, உடைமைகளை இழந்து நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்து உள்ளனர். கனமழை காரணமாக காசிரங்கா தேசிய பூங்கா வெள்ளத்தில் மிதக்கிறது. சுமார் 15 லட்சம் விலங்குகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளன. 6 காண்டாமிருகங்கள், 94 மான்கள் உட்பட114 விலங்குகள் உயிரிழந்துள்ளன. வெள்ளத்தில் சிக்கிய 86 மான்கள் உட்பட 95 விலங்குகளை பூங்கா ஊழியர்கள் பத்திரமாக மீட்டனர். இதில் 34 விலங்குகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்ற விலங்குகள் பாதுகாப்பான இடங்களில் விடப்பட்டுள்ளன.