சென்னை: சென்னையில் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு, கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி நேற்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய, இந்த கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் (52), கடந்த 5-ம் தேதி மாலை சென்னை பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் முன்பு வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து சென்னை செம்பியம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிவாங்கும் விதமாக இச்சம்பவம் நடந்துள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரிந்தது. இதையடுத்து, ராணிப்பேட்டை மாவட்டம், காட்பாடி பொன்னை பகுதியை சேர்ந்த அவரது தம்பி பாலு (39) மற்றும் கூட்டாளிகள் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
தலைமறைவாக உள்ள சிலரை வட சென்னை கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க் தலைமையிலான தனிப்படை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். இக்கொலையில் அரசியல் முன்விரோதம் எதுவும் இல்லை என்று சென்னை காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் விளக்கம் அளித்தார்.
இதற்கிடையே, உணவு டெலிவரி ஊழியர்கள்போல சீருடை அணிந்த கொலையாளிகள், சம்பவஇடத்தில் இருந்து தப்பிச் செல்லும்கண்காணிப்பு கேமரா காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகின. அவர்கள் அனைவரும் இளம்வயதினர். ஆனால், கைது செய்யப்பட்ட அனைவரும் 30 வயதை தாண்டியவர்கள்.
எனவே, கைதானவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை என்ற விமர்சனமும் எழுந்தது.
தவிர, ஆம்ஸ்ட்ராங் வெட்டப்பட்ட விதம் தென் மாவட்ட ரவுடிகளின் கைவரிசைபோல இருந்தது. கொடூரமாக நடத்தப்பட்ட தாக்குதல் என்பதால், வெளி மாநில கூலிப்படைக்கு தொடர்பு இருக்கலாம் என்றும் சந்தேகம் எழுந்தது. இதனால், ‘கொலையில் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகளை செய்து செய்ய வேண்டும். இந்த வழக்கில் நீதி கிடைக்க வேண்டும் என்றால் சிபிஐ விசாரிக்க வேண்டும்’ என்று ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் கூறிவருகின்றனர்.
மனைவிக்கு ஆறுதல்: இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் உடல் அஞ்சலிக்காக, பெரம்பூரில் அவரது வீடு அருகே உள்ள பந்தர் கார்டன் மேல்நிலைப் பள்ளியில் நேற்று வைக்கப்பட்டிருந்தது. பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவரும், உத்தர பிரதேச முன்னாள் முதல்வருமான மாயாவதி நேற்று காலை ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரது மனைவி பொற்கொடிக்கு ஆறுதல் கூறினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் மாயாவதி கூறியதாவது: ஆம்ஸ்ட்ராங் மறைவு செய்திகேட்டு மிகவும் வேதனையடைந்தேன். புத்தர் காட்டிய மனிதாபிமான பாதையில் மிகவும் அர்ப்பணிப்புடன் பயணித்தவர் ஆம்ஸ்ட்ராங். வீட்டின் அருகிலேயே அவரைவெட்டி படுகொலை செய்துள்ளனர்.
தமிழகத்தில் சட்டம் – ஒழுங்குசரியில்லை. அரசு தீவிரமாக செயல்பட்டிருந்தால் உண்மையான குற்றவாளிகளை நிச்சயம் பிடித்திருக்கலாம். ஆனால், இந்த கொலையில் உண்மையான குற்றவாளிகள் இன்னும் பிடிபடவில்லை.
எனவே, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை தமிழக அரசு உடனடியாக சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும். உண்மையான குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடிக்க வேண்டும். தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கைபராமரிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேநேரம், ஆம்ஸ்ட்ராங் கொலையால் வேதனையில் இருக்கும் பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர்கள், சட்டத்தை கையில் எடுக்க கூடாது. வருத்தத்துடன் இருந்தாலும் அமைதியான முறையில் கருத்துகளை தெரிவியுங்கள். ஆம்ஸ்ட்ராங் குடும்பத்துக்கு பகுஜன் சமாஜ் கட்சி துணைநிற்கிறது. அவரது குடும்பத்தினருக்கு தேவையான பாதுகாப்பை தமிழக அரசு வழங்க வேண்டும். ஆம்ஸ்ட்ராங் விட்டுச் சென்ற பணிகளை தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர்கள் தொடர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.