சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். மேலும், தமிழகத்தில் பட்டியலின மக்களுக்கு எதிராக கடந்த 3 ஆண்டுகளில் அதிக குற்றங்கள் நடந்துள்ளதாக அவர் குற்றம்சாட்டினார்.
ஆம்ஸ்ட்ராங்கின் இல்லத்துக்குச் சென்ற அண்ணாமலை அங்கு அவரது புகைப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். மேலும், ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி உள்ளிட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு கேள்விக்குள்ளாகி இருக்கிறது. காவல் துறையின் அடிப்படை கட்டமைப்பு வலுப்படுத்தப்படவில்லை. குற்றம் நிகழ்ந்த பிறகுதான் அரசு நடவடிக்கை எடுக்கிறது. மாநகர ஆணையரை மாற்றுவது, புதிய ஆணையரை நியமிப்பது போன்ற நடவடிக்கைகள் தேவையற்றவை.
குற்றம் நிகழ்வதற்கு முன்பு அவற்றை தடுப்பதற்கான நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டும். கோவையில் குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட நபரை கண்காணிக்க வேண்டும் என்று மத்தியில் இருந்து அறிவுறுத்தல் வந்தும், அவரை கண்காணிக்காமல் தமிழக காவல்துறை அலட்சியம் காட்டியது. இதுபோல் பல உதாரணங்கள் இருக்கின்றன. குற்றம் நிகழ்ந்த பிறகு காவல் துறைக்கு அழுத்தம் கொடுப்பது குறுக்கு வழிகளை எடுக்கவே உதவும். என்கவுன்டர் இதற்கு தீர்வாகாது. என்கவுன்டரை ஆதரித்தால் மாநிலம் காவல்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் நிலைக்குச் சென்றுவிடும். அது கூடாது.
தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு அதள பாதாளத்தில் உள்ளது. சென்னை கூலிப்படையின் தலைநகரமாக இருக்கிறது. பொதுமக்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை உருவாகி இருக்கிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் இதை தீவிரமாக எடுக்காமல், எதை தீவிரமாக எடுக்கிறார் என்பது எங்களுக்குத் தெரியவில்லை. இவ்வளவு நடந்தும் முதல்வர் தரப்பில் அதற்கான வேகம் வரவில்லை. புலிப்பாய்ச்சல் வரவில்லை. ஆமை வேகத்தில்தான் சட்டம் – ஒழுங்கு பராமரிப்பு நடந்து கொண்டிருக்கிறது. இப்போதாவது முதல்வர் விழித்துக்கொண்டு, இதன்பிறகாவது, தமிழகத்தில் இனி கூலிப்படைகளுக்கு இடமில்லை என்ற செய்தியை சொல்ல வேண்டும். அதை உடனடியாக நடத்திக்காட்டுவார்கள் என்று நம்புகிறோம்.
தமிழகத்தில் பட்டியல் சமூக மக்களுக்கு எதிராக கடந்த 3 ஆண்டுகளில் அதிக குற்றங்கள் நடந்துள்ளன. வேங்கைவயல் சம்பவம், எங்கள் கட்சியின் பொருளாளர் வெட்டப்பட்ட சம்பவம், எங்கள் கட்சியின் இளைஞரணி நிர்வாகிகள் வெட்டப்பட்ட சம்பவம், தற்போது ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டது என 17 முக்கிய குற்றச் சம்பவங்கள் நடந்துள்ளன. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை.
எங்கள் கட்சியைச் சேர்ந்த 5 தலைவர்கள் நாளை டெல்லி செல்ல இருக்கிறார்கள். மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தலைமையிலான இக்குழு, நாளை காலை 11 மணிக்கு டெல்லியில் பத்திரிகையாளர்களைச் சந்திக்க இருக்கிறார்கள். அப்போது, ஆம்ஸ்ட்ராங் கொலை உள்பட தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு பிரச்சினை, பட்டியல் சமூக மக்கள் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகள் குறித்து அவர்கள் விளக்குவார்கள்.
அடுத்ததாக, பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி. துரைசாமி தலைமையிலான குழுவினர், தேசிய பட்டியல் சமூக ஆணையத்தின் தலைவரைச் சந்திக்க உள்ளார்கள். தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக பட்டியல் சமூக மக்களுக்கு, தலைவர்களுக்கு நிகழ்ந்துள்ள கொடுமைகள் குறித்து விளக்குவார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வலியுறுத்துவார்கள். அடுத்ததாக, இதே கோரிக்கைகளை வலியுறுத்தி இக்குழு, தேசிய மனித உரிமை ஆணையத் தலைவரை சந்திக்க உள்ளது. தமிழகத்தில் நடக்கும் நிகழ்வுகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு உடனடி தீர்வை வழங்க வேண்டும் என்று அப்போது கோரிக்கை வைக்கப்படும்.
அதற்கு அடுத்ததாக, தமிழக பாஜக குழு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க உள்ளது. அப்போது, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற கோரிக்கை வைக்கப்படும். இத்தகைய தொடர் நிகழ்வுகள் மூலம் தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுக்க உள்ளோம்” என்று அண்ணாமலை தெரிவித்தார்.
சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்ட, பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர், திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்களின் இல்லத்திற்குச் சென்று, அவரது திருவுருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்தினோம். பெருந்துயரில் ஆழ்ந்திருக்கும் அவரது மனைவிக்கு, ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை.
அறிவார்ந்த தலைவராக… pic.twitter.com/y8J5Xlku3b
— K.Annamalai (@annamalai_k) July 8, 2024