ஆம்ஸ்ட்ராங் படுகொலை!
தமிழகத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். சென்னை பெரம்பூர் பகுதியில் உள்ள வேணுகோபால் சாமி கோயில் தெருவில் அவருக்குச் சொந்தமான வீட்டின் கட்டுமான பணிகள் நடைபெற்றுவருகிறது. பணிகளைப் பார்வையிட அவர் கடந்த 5-ம் தேதி மாலை சென்றிருந்தார். ஆம்ஸ்ட்ராங் அங்கு தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது தனியார் உணவு விநியோக நிறுவனத்தின் உடையில் வந்த சிலர், தாங்கள் மறைத்துவைத்திருந்த ஆயுதங்களால் ஆம்ஸ்ட்ராங்கை திடீரென சரமாரியாக வெட்டத் தொடங்கினர்.
தடுக்க வந்தவர்களையும் வெட்டிவிட்டு அந்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பித்து ஓடியது. இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. கொலைக் குற்றவாளிகள் எட்டு பேரை காவல்துறையினர் கைதுசெய்தனர். முதற்கட்ட விசாரணையில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஆற்காடு சுரேஷ் கொலைக்குப் பழிதீர்க்கும் விதமாக இந்த கொலை நடைபெற்றதாகக் கூறப்பட்டது. எட்டு பேரைத் தாண்டி மேலும் மூன்று பேர் கைதுசெய்யப்பட்டனர். ஆம்ஸ்ட்ராங் மரணத்துக்கு பல்வேறு தேசிய தலைவர்கள் இரங்கல் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கிள்ளிப்போட்ட திருமா!
ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய விடுதலை கட்சியின் தலைவர் திருமா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அவர் பேசும்போது, “ஆம்ஸ்ட்ராங்கின் இழப்பு ஒட்டுமொத்த தலித் அரசியலுக்கும் ஏற்பட்ட பேரிழப்பு. அவரின் கட்சி அலுவலகத்திலேயே அவரது உடலை நல்லடக்கம் செய்யவேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சி கோரிக்கை வைத்திருக்கிறது. அந்தக் கோரிக்கையை நாங்களும் வலியுறுத்துகிறோம். தற்போது இந்த கொலை வழக்கு தொடர்பாகச் சரணடைத்திருப்பவர்கள் யாரும் உண்மையான குற்றவாளிகள் அல்ல. இந்த கொலையின் பின்னணியில் உள்ள உண்மையான குற்றவாளிகளைக் கண்டறியத் தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளவேண்டும். இந்த கொலையில் சம்பந்தப்பட்ட உண்மை குற்றவாளிகள் அனைவரும் கைதுசெய்யப்படவேண்டும்” என்று காரசாரமாகப் பேசியிருந்தார்.
திருமாவைப் போலவே பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி சென்னை வந்து ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியிருந்தார். அப்போது பேசிய மாயாவதி, “ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் எங்கள் கட்சி மிகுந்த வேதனை அடைந்திருக்கிறது. இந்த கொலை வழக்கில் கூலிக்காகக் கொலை செய்தவர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். உண்மை குற்றவாளிகள் கைதுசெய்யப்படவில்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்பதைக் காட்டுகிறது. சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடவேண்டும். உண்மை குற்றவாளிகளைக் கைது செய்யவேண்டும்” என்று பேசியிருந்தார். இவர்களைத் தொடர்ந்து சமீபத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியும் உண்மை குற்றவாளிகளைக் கைது செய்யவேண்டும் என்ற அதே கோரிக்கையை முன்வைத்திருந்தார்.
யார் அந்த உண்மை குற்றவாளிகள்?
கூட்டணிக் கட்சியில் அங்கம் வகிக்கும் திருமாவளவன் தொடங்கி, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வரை கைது செய்யப்பட்டவர்கள் உண்மை குற்றவாளிகள் இல்லை. உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்யவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். இந்த வழக்கில் இவர்கள் சந்தேகிக்கும் உண்மை குற்றவாளிகள் யார் என்பது தொடர்பாக காவல்துறை வட்டாரத்தில் உயர் அதிகாரிகள் சிலரிடம் பேசினோம். ” கொலைக் குற்றம் நடந்த சில மணிநேரத்திலேயே குற்றவாளிகளைக் கைது செய்திருக்கிறோம். அதோடு அவர்கள் பயன்படுத்திய ஆயுதத்தையும் கைப்பற்றியிருக்கிறோம். கொலை சம்பவம் நடக்கும்போது அந்த பகுதியில் கைப்பற்றப்பட்ட சி.சி.டி.வி காட்சிகள் தொடங்கி நேரில் பார்த்த சாட்சியங்கள் வரை இருக்கின்றன. எந்த குற்றவாளிகளையும் மறைக்கும் எண்ணம் காவல்துறைக்கு கிடையாது. வழக்கு விசாரணை குறித்துத் தொடர்ந்து தெரியப்படுத்திக்கொண்டிருக்கிறோம்.
இந்த கொலையில் முதலில் கைது செய்யப்பட்ட 8 பேர், அடுத்து கைது செய்யப்பட்ட மூன்று பேர் ஆகிய 11 பேரைத் தவிர வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நோட்டமிட்டது யார், தகவல் சொன்னது யார் என்பது தொடங்கி பல்வேறு விவரங்களைச் சேகரித்திருக்கிறோம். பலர் சேர்ந்து கும்பலாகக் கொலை செய்யும்போது, ஒவ்வொருவர் ஒவ்வொரு உடல் பகுதியை வெட்டுவது. ஓடாமல் இருக்கக் கால் கணுக்காலை வெட்டுவது என இவையனைத்தும் தென் மாவட்டங்களில் உள்ள திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒருசில பகுதியைச் சேர்ந்த கூலிப்படை கும்பல் கொலை செய்யும் பேட்டன். இதில் கூலிப்படைக்கு எதுவும் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது. மற்றபடி, கைதானவர்களை போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்கும்போதுதான் இன்னும் யாருக்கெல்லாம் இந்த கொலைக் குற்றத்தில் தொடர்பு இருக்கிறது என்பதெல்லாம் தெரியவரும்” என்றார்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb