மும்பை,
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற 9-வது டி20 உலகக்கோப்பையை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கைப்பற்றி அசத்தியது. இதன்மூலம் 17 ஆண்டுகளுக்கு பின் டி20 உலகக்கோப்பையை கைப்பற்றி இந்தியா வரலாறு படைத்திருக்கிறது.
இதற்கு முன் ரோகித் கேப்டன் ஆனதிலிருந்து இந்திய அணி 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மற்றும் 2023 ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப் போட்டி ஆகியவற்றில் தோல்வி அடைந்து இருந்தது. இருப்பினும் மனம் தளராமல் 2024 டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியை சரியாக வழி நடத்தி வெற்றி பெற வைத்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை வெற்றி ரோகித் சர்மாவுக்கு தான் சொந்தம் என வெற்றி பெற்ற அணியில் இடம் பெற்றிருந்த சுழற் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் நெகிழ்ச்சியுடன் கூறி இருக்கிறார்.
அது குறித்து ஒரு பேட்டியில் பேசிய குல்தீப் யாதவ், “இந்த உலகக்கோப்பை ரோகித் சர்மாவுக்கானது. அவர் இந்த உலகக்கோப்பை வெற்றிக்காக திட்டமிட்ட விதம், அவர் அணியை நேசித்த விதம் ஆகியவற்றுக்காகவே இந்த உலகக்கோப்பை அவருக்குத்தான் சொந்தம். மேலும், அவரது நோக்கம் மற்றும் அணுகுமுறை, அணி சந்திப்புகளில் அவர் எங்களை ஊக்கப்படுத்தியது, தொடரில் தனது திட்டங்களை செயல்படுத்தியது, பேட்டிங்கில் முன்னே நின்று அணியை வழிநடத்தியது ஆகியவற்றுக்காக இந்த உலகக்கோப்பையை அவருக்குத்தான் அளிக்க வேண்டும்”என்று கூறினார்.