NASA Mission Mars: அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவின் மார்ஸ் மிஷன் குழு உறுப்பினர்கள் ஒரு வருட பயணத்திற்கு பிறகு விண்கலத்திலிருந்து வெளியே வந்தனர். விண்கலம் என்றால், இது உண்மையான விண்கலம் அல்ல. ஹூஸ்டனில் உள்ள ஜான்சன் விண்வெளி மையத்தில் ,செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலத்தை உருவகப்படுத்தி, உருவாக்கப்பட்ட இடத்தில் பரிசோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
இதற்காக, செவ்வாய் கிரகத்தில் இருக்கும் சூழலை கணித்து, அதன்படி ஒரு வாழ்விடத்தை நாசா, பூமியில் உருவாக்கியுள்ளது. இந்த செயற்கை செவ்வாயில், 12 மாதங்களுக்கும் மேலாக விண்வெளிவீரர்கள் தங்கியிருந்தனர். இந்த நிலையில், பூமிக்குள்ளே செவ்வாயில் இருப்பது போல் வாழ்ந்த நான்கு விண்வெளி வீரர்கள், வெளியில் அழைத்து வரப்பட்டனர்.
செவ்வாய் கிரகத்திற்கு பயணம் மேற்கொள்ளும் திட்டத்தில், ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ள நாசாவின் செவ்வாய் பணிக்குழு, விண்வெளி வீரர்கள் செவ்வாயில் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் சவால்களை எதிர்கொள்வது தொடர்பாக ஆய்வு செய்வதற்கான முதற்கட்ட நடவடிக்கைகளின் ஒரு பகுதி தான் இந்த செயற்கை செவ்வாய் வாழ்விட உருவகம் ஆகும்.
இந்த திட்டத்தின்படி, நான்கு பேர் செயற்கை செவ்வாயில் தங்கியிருந்தபோது, செவ்வாயில் எவ்வாறு நடப்பது என்பது பயிற்சிகளையும் மேற்கொண்டனர். அதேபோல செவ்வாயில் இருக்கும் அதே சுற்றுச்சூழல் உருவாக்கப்பட்டிருந்த அந்த இடத்தில் காய்கறிகளும் பயிரிடப்பட்டன.
கெல்லி ஹாஸ்டன், அன்கா செலாரியு, ரோஸ் ப்ரோக்வெல் மற்றும் நாதன் ஜோன்ஸ் ஆகிய நான்கு பேரும் கடந்த ஆண்டு ஜூன் 25ம் நாளன்று 3D தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட வாழ்விடத்திற்கு சென்று ஒரு வருடம் வசித்தனர். மருத்துவரும் மிஷன் மருத்துவ அதிகாரியுமான ஜோன்ஸ், செயற்கை செவ்வாயில் இருந்த 378 நாட்கள் விரைவகா கழிந்துவிட்டதாக தெரிவித்தார்.
1,700 சதுர அடி இடத்தில் நான்கு பேர்
சிவப்பு கிரகமான செவ்வாயில் இருப்பது போன்ற சூழலில் 1,700 சதுர அடி வீட்டில் வாழ்ந்தனர். எதிர்காலத்தில் செவ்வாய் கிரகத்திற்கு செல்லும்போது என்னவெல்லாம் சூழல் இருக்கும் என்று எதிர்பார்க்கிறார்களோ, அதுபோன்ற சூழ்நிலைகளை சமாளிக்க ஒரு பயிற்சியாக இந்த ஓராண்டு கால பயிற்சி காலமாக கொடுக்கப்பட்டது.
இந்த பயிற்சியில், செவ்வாய்க்கும் பூமிக்கும் இடையிலான தொடர்பு கொள்ளும் கால வித்தியாசம் 22 நிமிடங்கள் என்பதும் கடைபிடிக்கப்பட்டது. மேலும் இதுபோன்ற இரண்டு பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. இந்த பயிற்சியில் உடல் ஆரோக்கியம் மற்றும் செயல்திறன் தொடர்பான காரணிகள் பற்றிய தகவல்களை சேகரிப்பார்கள்.
‘செவ்வாய் கிரகம் தான் எங்கள் குறிக்கோள்’
ஜான்சன் விண்வெளி மையத்தின் துணை இயக்குனர் ஸ்டீவ் கோர்னர் கூறுகையில், “செவ்வாய் கிரகம் தான் எங்கள் குறிக்கோள்” என்று அவர் கூறினார், இது உலகளாவிய விண்வெளி ஆய்வு முயற்சியில் அமெரிக்காவின் செவ்வாய் கிரகம் தொடர்பான இலக்கை நோக்கி ஒரு முக்கியமான படி என்பது குறிப்பிடத்தக்கது.