தஞ்சாவூர் அருகே உள்ள களிமேடு கிராமத்தில் வசித்தவர், ஸ்ரீராம் வயது 22. இவர் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலையில் மங்களபுரம் பகுதியில் ஜிகர்தண்டா கடையில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் இரவு கடையின் முன் பகுதியில் நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது டூவீலரில் வந்த 6 மர்ம நபர்கள் டூவீலரை நிறுத்தி விட்டு கடைக்கு வந்துள்ளனர். கையில் ஆயுதங்களுடன் அவர்கள் வந்த விதத்தை பார்த்ததும் சுதாரித்து கொண்ட ஸ்ரீராம், கடையில் இருந்து வெளியே தப்பியோடியுள்ளார்.
சாலையில் சிறிது தூரம் ஓடிய ஸ்ரீராமை மர்ம நபர்களும் விடாமல் துரத்திச் சென்றனர். அத்துடன் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தலை, முகம், கை உள்ளிட்ட பகுதிகளில் ஸ்ரீராமை கொடூரமாக வெட்டி சாய்த்தனர். இதில் சரிந்து விழுந்த ஸ்ரீராம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த எஸ்.பி., ஆஷிஷ் ராவத் உள்ளிட்ட போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டதுடன், ஸ்ரீராம் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பீக் ஹவரில் மக்கள் நடமாட்டம் மிகுந்த நேரத்தில் சாலையிலேயே நடந்த இந்த கொலை சம்பவம் தஞ்சாவூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மருத்துவக் கல்லூரி போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பழிக்கு பழியாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்பது தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தஞ்சாவூர் அருகே உள்ள மாதாகோட்டை பகுதியை சேர்ந்தவர் பிரின்ஸ் லாரா என்கிற சின்னா (28,) கடந்த 2022-ல் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஸ்ரீராம் உள்ளிட்டோரை வல்லம் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜாமீனில் வெளியே வந்த ஸ்ரீராம் ஜிகர்தண்டா கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் ஸ்ரீராம் கொலை செய்துள்ளனர்.
எனவே பழிக்கு பழியாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்றே போலீஸார் கருதுகின்றனர். கடந்த மாதம் திருவாரூர் மாவட்டம், சோழங்கநல்லூரைச் சேர்ந்த திமுக பிரமுகரான பாபு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக தஞ்சாவூர் வந்த போது ஞானம் நகரில் பட்டப்பகலில் சாலையிலேயே வெட்டி கொலை செய்யப்பட்டார். அதே போல் ஸ்ரீராமும் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் சாலையிலேயே கொலை செய்யபட்டுள்ளார். இந்த சம்பவம் தஞ்சாவூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.