புதுடெல்லி: நீட் தேர்வு வினாத்தாள் கசிவு பரவலாக நடந்திருந்தாலோ, தவறு செய்தவர்களை கண்டறிய முடியாவிட்டாலோ மறுதேர்வுக்கு உத்தரவிடலாம். எனினும், மறு தேர்வு எங்களது கடைசி முடிவாகவே இருக்கும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வு கடந்த மே 5-ம் தேதி நடைபெற்றது. இத்தேர்வில் 1,563 பேருக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், வினாத்தாள் கசிவு, ஆள் மாறாட்டம், 67 மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றது தொடர்பாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, நீட் தேர்வை ரத்து செய்து, மறு தேர்வு நடத்த வேண்டும் என மாணவர்கள், பெற்றோர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் 38 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
வினாத்தாள் கசிவு பரவலாக நடந்ததா, அல்லது தனி சம்பவமா என்பதை கண்டறிய வேண்டும். கசிந்த வினாத்தாளுக்கு பணம் கொடுத்தவர்கள், வினாத்தாளை விநியோகம் செய்தவர்கள் மீது இரக்கம் காட்ட கூடாது. வினாத்தாள் கசிவு பரவலாக நடந்திருந்தாலோ, தவறு செய்தவர்களை கண்டறிய முடியாவிட்டாலோ மறுதேர்வுக்கு உத்தரவிடலாம். எனினும், மறு தேர்வுக்கு உத்தரவிடும்போது கவனமாக இருக்க வேண்டும். இது லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் சம்பந்தப்பட்ட விஷயம். சிலர் மோசடி செய்தனர் என்பதற்காக தேர்வை ஒட்டுமொத்தமாக ரத்து செய்யக் கூடாது. மறு தேர்வு எங்களது கடைசி முடிவாகவே இருக்கும்.
ஏற்கெனவே இந்த விவகாரத்தை சிபிஐ, காவல் துறை விசாரித்து வருகிறது. பல்துறை நிபுணர் குழு தீவிரமாக விசாரிக்க வேண்டும்.
நீட் தேர்வு முறைகேடு குறித்து சிபிஐ தனது விசாரணையின் நிலை அறிக்கையை நாளை (ஜூலை 10) மாலை 5 மணிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். தேர்வு தொடங்குவதற்கு எத்தனை மணி நேரத்துக்கு முன்பு வினாத்தாள் கசிந்தது, பல மணி நேரம் முன்பே கசிந்திருந்தால் அது எத்தனை மாணவர்களுக்கு சாதகமாக அமைந்தது என்பது பற்றிய தகவலை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) ஆதாரப்பூர்வமாக அளிக்க வேண்டும்.
தேர்வு மையங்களுக்கு வினாத்தாள் எப்படி செல்கிறது, எந்த நேரத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது, எப்போது மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது என்பது தொடர்பான தகவல்களை மத்திய அரசும், என்டிஏவும் 3 நாட்களில் வழங்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டுள்ள நீதிபதிகள், வழக்கை வரும் 11-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.