கராச்சி: பாகிஸ்தான் நாட்டின் கராச்சியில் அமைந்துள்ள பாகிஸ்தான் பங்குச் சந்தை அலுவலக கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு வர்த்தகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
பாகிஸ்தான் பங்குச் சந்தை அலுவலக கட்டிடத்தின் நான்காவது மாடியில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வர்த்தகம் நிறுத்தப்பட்டுள்ளது குறித்த தகவல் வலைதளத்திலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்தில் இருந்து ஊழியர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். மின்சார சர்க்யூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என தகவல். இதனை அதிகாரிகளும் உறுதி செய்துள்ளனர்.
‘பிஎஸ்எக்ஸ்’ என பாகிஸ்தான் பங்குச் சந்தை அறியப்படுகிறது. சுமார் 523 நிறுவனங்கள் இதில் தங்களது பங்கு வர்த்தகத்தை மேற்கொண்டு வருகின்றன. இதன் மொத்த மதிப்பு சுமார் 27 பில்லியன் டாலர்கள். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இங்கு நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் சுமார் 7 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.