பாட்னா,
பீகாரில் பெய்து வரும் கனமழையை தொடர்ந்து, கடந்த 24 மணிநேரத்தில் 12 பேர் மின்னல் தாக்கி உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாநிலத்தில் பெய்த தொடர் கனமழையால் பல்வேறு ஆறுகள் மற்றும் அணைகளில் நீர்மட்டம் உயரத் தொடங்கியது. கோசி, பாகமதி, கந்தக், கம்லா மற்றும் அதார்வா உள்ளிட்ட முக்கிய ஆறுகளில் நீர் மட்டம் அபாய கட்டத்தை எட்டியது. சில பகுதிகளில் கோசி ஆறு அபாய அளவைத் தாண்டி பாய்ந்து வருகிறது.
புதிய உயிரிழப்புகளுடன், கடந்த 48 மணி நேரத்தில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 10 நாட்களில் பீகாரின் பல்வேறு மாவட்டங்களில் 40க்கும் மேற்பட்டோர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் போது மக்கள் விழிப்புடன் வீட்டிற்குள்ளேயே இருக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பீகார் முதல்-மந்திரி அலுவலகம் இன்று வெளியிட்ட அறிக்கையின்படி, ஜமுய் மற்றும் கைமூரில் தலா மூன்று இறப்புகளும், ரோஹ்தாசில் இரண்டு இறப்புகளும், சஹர்சா, சரண், போஜ்பூர், கோபால்கஞ்ச் ஆகிய இடங்களில் தலா ஒரு இறப்பும் பதிவாகியுள்ளது.