புதுடெல்லி: “பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்குவதை கட்டாயமாக்குவது என்பது அவர்களை பணியிடங்களில் இருந்து ஒதுக்கி வைக்க வழி வகுக்கும்” என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பணிபுரியும் பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் கட்டாய விடுப்பு வழங்க கோரிய மனு இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது நீதிபதிகள், “பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்குவதை கட்டாயமாக்குவது என்பது அவர்களை பணியிடங்களில் இருந்து ஒதுக்கி வைக்க வழி வகுக்கும். நாங்கள் அதனை செய்ய விரும்பவில்லை. பெண்களை பாதுகாக்க எடுக்கும் முயற்சிகள் அவர்களுக்கு பாதகமாக அமையவும் வாய்ப்புள்ளது. மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு விடுப்பு வழங்குவதை கட்டாயமாக்கினால், தனியார் நிறுவனங்கள் பெண்களை பணிக்கு எடுப்பதில் தயக்கம் கட்டலாம்.
இது அரசின் கொள்கை முடிவு சார்ந்த விஷயம். எனவே, நீதிமன்றம் இந்த விஷயத்தில் கவனம் செலுத்த விரும்பவில்லை. எனவே, மனுதாரர்கள் இது தொடர்பாக அரசின் சம்பந்தப்பட்ட அமைச்சகங்களை அணுகலாம். எனினும், அதேநேரம் மத்திய அரசு இது தொடர்பாக மாநில அரசுகள் மற்றும் நிறுவனங்களுடன் கலந்தாலோசித்து வழிகாட்டு நெறிமுறைகளை கொண்டுவரலாம். மாநில அரசுகளுக்கு இந்த விஷயத்தில் கொள்கை முடிவு எடுக்க சுதந்திரம் உள்ளது” என்று தெரிவித்தனர்.