லக்னோ: கடந்த வாரம் உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தில் போலே பாபா சாமியார் நடத்திய பிரசங்க கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்தனர். இந்தச் சூழலில், இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த சுதிர் பிரதாப் சிங் என்பவர் கூறும்போது, “தனது காலடி மண்ணை எல்லோரும் எடுத்துக் கொள்ளுமாறு போலே பாபா அறிவித்தார். அதையடுத்து கூட்டத்தில் இருந்த அனைவரும் அந்த மண்ணை எடுக்க முண்டியடித்துக் கொண்டு சென்றனர். அதில் ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர். அதுவே பலரது உயிரிழப்புக்கு காரணமாக அமைந்தது. இந்தச் சம்பவத்தை தொடர்ந்து பாபாவின் கார் அங்கிருந்து சென்றது. உள்ளூர் மக்களும், நிர்வாகிகளும் தான் பக்தர்களுக்கு உதவி செய்தார்கள்” என்றார்.
முன்னதாக, போலே பாபாவின் வழக்கறிஞர் ஏ.பி.சிங்,“இது விபத்து அல்ல; சமூக விரோதிகளின் சதி செயல்” என தெரிவித்திருந்தார். அதேபோல், போலே பாபா வீடியோ ஒன்றில் பேசும்போது, “ஆன்மிக கூட்ட நெரிசலில் 121 பேர் உயிரிழந்த சம்பவம், மிகவும் வேதனை அளிக்கிறது. இந்த வலியை தாங்கும் சக்தியை கடவுள் நமக்கு அளிக்க வேண்டுகிறேன். இந்த விவகாரத்தில் உத்தரபிரதேச அரசின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். ஆன்மிக கூட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி மிகப்பெரிய அசம்பாவிதத்தை ஏற்படுத்திய குற்றவாளிகள் யாராக இருந்தாலும் விட்டுவிடக் கூடாது. அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன்.
இந்த நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்று எனது கமிட்டி உறுப்பினர்களை கேட்டுக் கொண்டுள்ளேன். அதற்கான ஏற்பாடுகளை எனது வழக்கறிஞர் ஏ.பி.சிங் செய்து வருகிறார்.இந்த நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதுதான் சிறந்த வழியாகும். அந்தக் குடும்பத்தினருக்காக நான் பிரார்த்திக்கிறேன்” என்று கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.