புதுடெல்லி: ராகுல் காந்தி இன்று (ஜூலை 8) மணிப்பூருக்கும் வரவுள்ள நிலையில், அதிகாலையில் ஜிரிபாம் மாவட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மணிப்பூரில் மைதேயி மற்றும் குக்கி ஸோ சமூகத்தினர் இடையே கடந்த ஆண்டு மே மாதம் ஏற்பட்ட கலவரத்தில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பல மக்கள் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்தனர். தற்போது கூட ஏராளமானோர் முகாம்களிலேயே வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று (ஜூலை 8) மணிப்பூர் செல்லும் ராகுல் காந்தி, கலவரம் வெடித்த ஜிரிபாம் பகுதிக்கு சென்று பார்வையிடவுள்ளார். அதன்பின் நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களை சந்தித்துப் பேசவுள்ள அவர், அம்மாநில அரசியல் தலைவர்களையும் சந்திக்கவுள்ளார். இதனிடையே அதிகாலையில் ஜிரிபாம் மாவட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதோடு, குக்கி-ஸோ மற்றும் மைதேயி ஆகிய இரு சமூகங்களைச் சேர்ந்த உறுப்பினர்களின் சில வீடுகளுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், அதிகாலை 3 மணியளவில், அப்பகுதியில் இருந்த புறக்காவல் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும், ஆயுதங்களுடன் இருந்த இருவரை பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர், அதைத் தொடர்ந்து அவர்கள் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். கலவரம் ஏற்பட்ட பின்னர், ராகுல் காந்தி மணிப்பூர் செல்வது இது 3-ஆவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.