தற்போது நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனனநாயக கூட்டணி 293 இடங்களில் வெற்றிபெற்றது. மறுபக்கம், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி 234 இடங்களுடன் வெற்றிபெற்றது. இந்த நிலையில், கர்நாடகாவின் சிக்கபள்ளாப்பூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை 1.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்ற பா.ஜ.க எம்.பி கே.சுதாகர், தனது வெற்றியைக் கொண்டாடும் வகையில் தனி நிகழ்ச்சி ஏற்பாடு செய்து கட்சித் தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் உணவு, மதுபானம் வழங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
இத்தனைக்கும், பா.ஜ.க எம்.பி கே.சுதாகர் இந்த நிகழ்ச்சிக்கு போலீஸ் பாதுகாப்பு கோரி காவல்துறைக்கு முறையாகக் கடிதம் எழுதி இதைச் செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சி தொடர்பான வீடியோக்களிலும், போலீஸ் பாதுகாப்போடு திறந்தவெளி மைதானத்தில் பொதுமக்களுக்கு வரிசையில் மதுபானம் வழங்கப்பட்டிருப்பது தெரியவருகிறது. கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கில் தொண்டர்களும், பொதுமக்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து மதுபானம் வாங்கிச் செல்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.அசோகா, முன்னாள் எம்.எல்.ஏ நாகராஜூ, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் முன்னாள் சட்ட மேலவை உறுப்பினர் இ.கிருஷ்ணப்பா உள்ளிட்டோர் பங்கேற்றதாகச் சொல்லப்படுகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாக பா.ஜ.க-வை விமர்சித்திருக்கும் மாநில சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ், இது தொடர்பான வீடீயோவை தனது X சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு, “சொல்வது ஒன்று, செய்வது ஒன்று. இவர்களை எப்படி நம்புவது… டெங்குவால் மாநிலம் பாதிக்கப்பட்டிருக்கும் சூழலில் பா.ஜ.க தலைவர்கள் மது விநியோகத்தில் மும்முரமாக ஈடுபட்டிருக்கின்றனர். நான் மங்களூருக்குச் சென்றபோது நீச்சலில் ஈடுபடுவது குறித்து கேள்வியெழுப்பிய பா.ஜ.க தலைவர்கள் எங்கே… மது விநியோகம்தான் உங்கள் கலாசாரமா?” என்று கேள்வியெழுப்பியிருக்கிறார்.
மேலும், மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமார், “இதுதான் பாஜக-வின் கலாசாரமா… பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இதற்கு பதிலளிக்க வேண்டும்” என்று செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார். இணையதளவாசிகளும், `பொதுமக்களுக்கு ஒரு சட்டம், அரசியல்வாதிகளுக்கு ஒரு சட்டமா?’ என கேள்வியெழுப்பிவருகின்றனர்.
ஆனால், பா.ஜ.க எம்.பி கே.சுதாகரோ, நிகழ்ச்சியில் மதுபானம் விநியோகம் செய்தது தனக்கு தெரியாது என்றும், நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் வேறு எங்காவது மதுவை வாங்கிவந்து அங்கு வைத்திருக்கலாம் என்றும் மறுத்திருக்கிறார்.