சென்னை: வணிகப் பிரிவில் 300 சதுர மீட்டர் அகலம், 14 மீட்டர் உயரம் உடைய கட்டிடங்களுக்கு மின்இணைப்பு வழங்க, பணி நிறைவு சான்றுபெறுவதில் இருந்து விலக்கு அளித்து மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கட்டப்படும் கட்டிடங்களுக்கு மாநகராட்சி, நகராட்சிஉள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்து அனுமதி பெற்றால் தான் மின்சாரம், குடிநீர், கழிவுநீர் ஆகிய இணைப்புகளை சம்மந்தப்பட்ட அரசு துறைகள் வழங்கும். வீடுகளை பொறுத்தவரை 8 வீடுகள் அல்லது 750 சதுரமீட்டருக்குள் கட்டப்படும் கட்டிடங்களுக்கு பணி நிறைவு சான்று பெற விலக்கு ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ளது.
தொழில்முனைவோர் பாதிப்பு: ஆனால், வணிகப் பிரிவு கட்டிடங்களுக்கு இந்தச் சலுகை இல்லை. இதனால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் பாதிக்கப்பட்டனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று 300 சதுர மீட்டர் அகலம் மற்றும் 14 மீட்டர் உயரத்துக்கு மிகாமல் கட்டப்படும் வணிக கட்டிடங்களுக்கு பணிநிறைவு சான்று பெற தேவையில்லை என அரசு சமீபத்தில் அறிவித்தது.
இந்நிலையில், அரசு உத்தரவைபின்பற்றி வணிகப் பிரிவில் மேற்கண்ட விதிகளுக்கு உட்பட்ட கட்டிடங்களுக்கு மின்இணைப்பு வழங்க பணி நிறைவு சான்று பெறுவதில் இருந்து விலக்கு அளித்து மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.
குறுந்தொழில் துறைக்கு பயன்: இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், ‘‘300 சதுரமீட்டர் அகலம், 14 மீட்டர் உயரத்துக்கு மிகாமல் கட்டப்படும் வணிக கட்டிடங்களுக்கு பணி நிறைவு சான்று பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. குறுந்தொழில் பிரிவில் தொழில் தொடங்குவோர் பணி நிறைவு சான்று கிடைக்காததால் மின்இணைப்பு பெற முடியாமல் சிரமப்பட்டனர். இதனால், அவர்கள் தற்காலிக மின்இணைப்பை பெற்றுபயன்படுத்தி வந்தனர். தற்போதுகுறைந்த சதுர அடி கட்டிடங்களுக்கு பணி நிறைவு சான்று பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால், குறுந்தொழில் துறையினர் பயன் அடைவார்கள்’’ என்றனர்.