புதுச்சேரி: தமிழகத் தொகுதியான விக்கிரவாண்டி இடைத்தேர்தலை முன்னிட்டு புதுச்சேரி மாநில எல்லையில் குறிப்பிட்ட பகுதியில் மதுக்கடைகளை 4 நாட்கள் மூடுமாறு கலால் துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் 10-ம் தேதி நடைபெறுகிறது. அதையடுத்து பிரசாரம் முடிந்த 8-ம் தேதி முதல் அத்தொகுதியில் உள்ள மதுக்கடைகளை மூட தமிழக அரசின் கலால் துறை உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், விக்கிரவாண்டி தொகுதியின் எல்லை புதுவை மாநிலம் மண்ணாடிபட்டு கொம்யூன் பஞ்சாயத்து பகுதிகளில் அமைந்துள்ளன. ஆகவே, மது புதுச்சேரி பகுதியிலிருந்து விக்கிரவாண்டிக்குள் செல்லாதவகையில் புதுச்சேரி மண்ணாடிபட்டு கொம்யூன் பஞ்சாயத்தில் அமைந்துள்ள மதுக்கடைகளுக்கு இன்று முதல் வரும் 10ம் தேதி (புதன்கிழமை) வரை விடுமுறை அளித்து இன்று உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், விக்கிரவாண்டி தொகுதி வாக்கு எண்ணிக்கை வரும் 13 ம் தேதி நடைபெறுகிறது. அதையடுத்து 13-ம் தேதியும் மண்ணாடிபட்டு கொம்யூன் பஞ்சாயத்து பகுதியில் உள்ள மதுக்கடைகள் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக 4 நாட்கள் புதுச்சேரியில் எல்லைப்பகுதியிலும் மதுக்கடைகள், சாராயக்கடைகள் மூடப்பட்டிருக்கும். மண்ணாடிப்பேட் கொம்யூனில் மதுபானக்கடைகள், சாராய, கள்ளுக்கடைகள் அனைத்தும் இந்த நான்கு நாட்களும் மூட புதுச்சேரி கலால்துறை துணை ஆணையர் மேத்யூ பிரான்சிஸ் உத்தரவை அனுப்பியுள்ளார்.