ஆக்ரா: ‘‘ஹாத்ரஸ் ஆன்மிக கூட்ட நெரிசலில் 121 பேர் உயிரிழந்தது மிகவும் வேதனை அளிக்கிறது’’ என்று சாமியார் போலே பாபா வீடியோவில் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டம் சிக்கந்தராராவின் கிராமத்தில் முகல்கடி கிராமத்தில், கடந்த 2-ம் தேதி சாமியார் நாராயண் சாகர் விஸ்வ ஹரி (எ) போலே பாபா (65) என்பவரது ஆன்மிகக் கூட்டம் நடைபெற்றது. இவரது உண்மையான பெயர் சுராஜ்பால். கூட்டம் முடிந்ததும் போலே பாபா வெளியேறினார். அப்போது அவரது பாதங்களை வணங்கி ஆசீர்வாதம் பெற கூட்டத்தினர் முயன்றனர். அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து உ.பி. போலிசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை நடத்தி பலரை கைது செய்தனர். ஆனால், போலேபாபாவின் பெயர் முதல் தகவல் அறிக்கையில் இடம்பெறவில்லை. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், ஆன்மிக நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த முக்கிய குற்றவாளி தேவ்பிரகாஷ் மதுக்கரை 2 நாட்களுக்கு முன்னர் டெல்லியில் உ.பி. போலீஸார் கைது செய்தனர்.
இதற்கிடையில், போலேபாபாவை காப்பாற்ற மாநில போலீஸார் முயற்சிப்பதாக அரசியல்கட்சியினர் கடும் விமர்சனம் செய்துவருகின்றனர். ஆனால், போலே பாபாவை தொடர்ந்து தேடி வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், போலே பாபாவின் ஒரு வீடியோ கடந்த சனிக்கிழமை வெளியானது. மொத்தம் 2.5 நிமிடங்கள் கொண்ட அந்த வீடியோவில் போலே பாபா பேசியிருப்பதாவது:
ஆன்மிக கூட்ட நெரிசலில் 121 பேர் உயிரிழந்த சம்பவம், மிகவும் வேதனை அளிக்கிறது. இந்த வலியை தாங்கும் சக்தியை கடவுள் நமக்கு அளிக்க வேண்டுகிறேன். இந்த விவகாரத்தில் உத்தரப் பிரதேச அரசின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். ஆன்மிக கூட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி மிகப்பெரிய அசம்பாவிதத்தை ஏற்படுத்திய குற்றவாளிகள் யாராக இருந்தாலும் விட்டுவிடக் கூடாது. அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன்.
இந்த நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்று எனது கமிட்டி உறுப்பினர்களை கேட்டுக் கொண்டுள்ளேன். அதற்கான ஏற்பாடுகளை எனது வழக்கறிஞர் ஏ.பி.சிங் செய்து வருகிறார்.இந்த நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதுதான் சிறந்தவழியாகும். அந்த குடும்பத்தினருக்காக நான் பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு போலே பாபா கூறியுள்ளார்.