புதுடெல்லி: ஹாத்ரஸ் நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்த விவகாரத்தில் போலே பாபா மீது இதுவரை எந்தநடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதன் பின்னணியில் உத்தரப்பிரதேச தலித் அரசியல் இருப்பதாகத் தெரிகிறது.
உ.பி.யின் ஹாத்ரஸ் மாவட்டம் சிக்கந்தராராவின் கிராமத்தில் தலித்சமுதாயத்தைச் சேர்ந்த சாமியார்போலே பாபாவின் ஆன்மிக சொற்பொழிவு கூட்டம் நடைபெற்றது. கூட்டம் முடிந்ததும் முதல் நபராக வெளியேறிய பாபாவிடம் ஆசிபெற கூட்டம் அலைமோதியது. இதனால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி112 பெண்கள் உள்ளிட்ட 121 பேர்உயிரிழந்தனர். இது தொடர்பாக முக்கிய நிர்வாகியான தேவ்பிரகாஷ் மதுக்கர் மற்றும் பெயர் தெரியாத சிலர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஆனால், போலே பாபாவின் பெயர் இதன் முதல் தகவல் அறிக்கையில் இடம்பெறவில்லை.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் காண வந்த முதல்வர் யோகி ஆதித்யநாத், இது சமூகவிரோதிகளின் சதி எனக்கூறினார். போலே பாபாவின் பெயரை முதல்வர் குறிப்பிடவில்லை. இதற்கு மக்களவைத் தேர்தலில் தலித்களின் வாக்குகளை ஆளும் பாஜக இழந்தது காரணமாக இருக்கலாம் எனத் தெரிகிறது. உ.பி.யின் 17 தனித்தொகுதிகளில் பாஜக 8-ல் மட்டும் வெற்றி பெற்றது.
இதுபோல உ.பி. எதிர்க்கட்சியான சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவும் பாஜக அரசு மீது குறை கூறினாரே தவிர, பாபா மீது குறை கூறவில்லை.
அலிகர், ஹாத்ரஸில் உள்ள பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சந்தித்து ஆறுதல் கூறினார். பிறகு, சம்பவத்துக்கு காரணம் அரசு நிர்வாகத்தின் அலட்சியம் எனக் கூறினாரே தவிர, பாபாவின் பெயரைக்கூட அவர் உச்சரிக்கவில்லை. சிறிய கட்சிகளின் தலைவர்களும் பாபாவை விமர்சிக்கவில்லை.
ஆனால், சம்பவம் முடிந்த 4 தினங்களுக்கு பின் பகுஜன் சமாஜ் கட்சித் (பிஎஸ்பி) தலைவர் மாயாவதி மட்டும் பாபா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். இத்தனைக்கும், பாபாவும் மாயாவதியின் ஜாதவ் சமூகத்தைச் சேர்ந்தவர் ஆவர்.
மக்களவை தேர்தலில் இவருக்கு தனித்தொகுதி உட்பட ஒன்றில் கூட வெற்றி கிடைக்கவில்லை. இவரை போல் தலித் அரசியல் செய்யும் ராவண் (எ) சந்திரசேகர் ஆஸாத் நகீனா தனித்தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டுஎம்.பி.யாகி உள்ளார். பிஎஸ்பியின் வாக்குகள் ஆஸாத்தின் ஆஸாத் சமாஜ் கட்சி (கன்ஷிராம்) பக்கம் திரும்பி வருகின்றன.
உ.பி.யின் தேர்தல்களில் மதம் மற்றும் அதன் சமூகங்களின் அரசியல் முக்கியத்துவம் பெறுகிறது. கிராமங்களில் சுமார் 30% தலித்கள் உள்ளனர். இதில் சுமார் 60%ஜாதவ் சமூகத்தினர். போலே பாபாவின் பக்தர்களில் பெரும்பாலனவர்கள் தலித்கள்.
121 பேர் உயிரிழப்புக்கு பிறகும் பக்தர்களிடம் பாபா மீதான செல்வாக்கு குறையவில்லை. இதை உணர்ந்த அரசியல் கட்சிகள்,2026-ல் நடைபெறவுள்ள உ.பி.சட்டப்பேரவை தேர்தலில் வாக்குவங்கியை இழக்க மனமின்றி பாபாவை விமர்சிப்பதை தவிர்ப்ப தாகக் கூறப்படுகிறது.