India National Cricket Team: நடந்து முடிந்த ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 (ICC T20 World Cup 2024) தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. சுமார் 17 ஆண்டுகளுக்கு பின்னர் இந்திய அணி டி20 உலகக் கோப்பையை கைப்பற்றியது. அதுமட்டுமின்றி கடந்த 11 ஆண்டுகளாக ஐசிசி கோப்பையை இல்லாமல் தவித்து வந்த இந்திய ரசிகர்களுக்கு ரோஹித் சர்மா விடியலை தந்தார் எனலாம். கபில் தேவ், தோனிக்கு பிறகு ஐசிசி கோப்பையை ரோஹித் வென்ற அந்த வரிசையில் இடம்பிடித்துள்ளார்.
இந்த மாபெரும் வெற்றியை கொண்டாடும் விதமாக மும்பையில் மரைன் டிரைவ் பகுதியில் திறந்தவெளி பேருந்தில் இந்திய அணி (Team India) வீரர்கள் ரோட் ஷோ (Victory Parade) நடத்தியதில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் பங்கேற்று இந்திய அணியை கொண்டாடி தீர்த்தனர். இந்த வெற்றி தனி நபர் ஒருவருக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த அணிக்கும் உரித்தானது என்பது தொடர்ந்து சொல்லப்பட்டு வந்தது. வீரர்கள் மட்டுமின்றி பயிற்சியாளர்கள் குழுவும் இந்த வெற்றிக்கு சொந்தக்காரர்கள் எனலாம்.
ரூ.125 கோடி பரிசுத் தொகை
அமெரிக்கா மற்றும் கரீபியன் தீவுகளில் நடந்த இந்த தொடரில் வீரர்கள், பயிற்சியாளர்கள் குழு என மொத்தம் 42 பேர் இந்திய அணி தரப்பில் பயணித்துள்ளனர். இதில் ரிசர்வ் வீரர்களும் அடங்கும். இது ஒருபுறம் இருக்க ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிசிசிஐ (BCCI) சார்பில் 125 கோடி ரூபாய் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டது. மும்பையில் ரோட் ஷோவை தொடர்ந்து வான்கடே மைதானத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவில் இந்திய அணிக்கு வழங்கப்பட்டது.
இந்த பரிசுத்தொகையானது இந்திய அணி வீரர்களுக்கு மட்டுமின்றி பயிற்சியாளர்கள் குழு உள்பட மொத்தம் 42 பேருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது. இருப்பினும் இந்த பரிசுத் தொகையின் பங்கு என்பது ஒவ்வொருக்கு தகுந்தாற்போல் வேறுபடும். அந்த வகையில் யார் யாருக்கு இந்த பரிசுத் தொகையில் இருந்து எவ்வளவு பங்கு சென்றது என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது, அதனை இங்கு காணலாம்.
வீரர்களுக்கு எவ்வளவு?
இந்திய அணியின் 15 வீரர்கள், அதாவது ஒரு போட்டியில் கூட விளையாடாத சஞ்சு சாம்சன், ஜெய்ஸ்வால், சஹால் ஆகியோருக்கும் கூட தலா 5 கோடி ரூபாய் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் கூறப்படுகின்றன. வீரர்கள் அனைவருக்கும் தலா 5 கோடி ரூபாய் எனில் அவர்களுக்கு 125 கோடி ரூபாயில் 75 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என தெரிகிறது. மேலும், ரிசர்வ் வீரர்களாக சுப்மன் கில், ரின்கு சிங், கலீல் அகமது, ஆவேஷ் கான் ஆகிய நான்கு பேரை பிசிசிஐ அறிவித்திருந்தது. அவர்களுக்கும் தலா 1 கோடி ரூபாய் வழங்கப்பட உள்ளது. அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழு உறுப்பினர்களுக்கும் தலா 1 கோடி ரூபாய் வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
டிராவிட்டுக்கு எவ்வளவு?
பயிற்சியாளர்கள் குழுவில் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு மட்டும் 5 கோடி ரூபாய் என்றும் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர், பீல்டிங் பயிற்சியாளர் டி திலீப் மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே ஆகியோருக்கு தலா 2.5 கோடி ரூபாய் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்திய அணியுடன் பயணித்த 3 த்ரோடவுன் நிபுணர்கள், 3 பிசியோதெரபிஸ்டுகள், இரண்டு மசாஜ் வல்லுநர்கள், வலிமை மற்றும் கண்டிஷனிங் பயிற்சியாளர் ஆகியோருக்கு தலா 2 கோடி ரூபாய் வழங்கப்பட இருக்கிறது. இதுமட்டுமின்றி மகாராஷ்டிர அரசும் ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு 11 கோடி ரூபாயை பரிசாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.