மும்பையில் தொழிலதிபர் முகேஷ் அம்பானி மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணம், வரும் 12-ம் தேதி கோலாகலமாக நடைபெறவிருக்கிறது. இத்திருமண சடங்குகள் கடந்த ஒன்றாம் தேதியில் இருந்தே தொடங்கி நடந்து வருகிறது. இத்திருமணம் மூன்று நாள்கள் நிகழ்ச்சியாக மும்பை பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்ஸில் உள்ள ஜியோ வேல்டு சென்டரில் நடைபெறுகிறது. இத்திருமணத்திற்கு உலகம் முழுவதும் இருந்து முக்கிய பிரபலங்கள் வர இருக்கின்றனர். இதையடுத்து பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்ஸில் இருக்கும் ஜியோ வேல்டு சென்டருக்கு செல்லும் சாலைகள் அனைத்தும் 12-ம் தேதியில் இருந்து 15-ம் தேதி வரை மூடப்பட்டு இருக்கும் என்று போக்குவரத்து காவலர்கள் இரண்டு நாள்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட்டனர். இந்த அறிவிப்புக்கு பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்ஸில் உள்ள அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக மகேஷ் என்பவர் சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ள பதிவில், “இது தனியார் திருமணம். பொதுநிகழ்ச்சி கிடையாது. அப்படி இருக்கும்போது ஏன் பொதுமக்களை தொந்தரவு செய்யவேண்டும். சாலைகள் ஒன்றும் தனியார் சொத்து கிடையாது. அப்படி இருக்கும் போது யாரோ திருமணம் செய்து கொள்கிறார்கள் என்பதற்காக ஏன் அதிகாரிகள் சாலையை மூடவேண்டும். நாளைக்கு வசதி படைத்த யாராவது விவாகரத்து செய்தால் எங்களை வீட்டில் இருக்க சொல்லி தடையுத்தரவு போடுவீர்களா?” என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.
மற்றொருவர் வெளியிட்டுள்ள பதிவில், “இது வசதி மற்றும் அதிகாரத்தின் வெளிப்பாடு, இந்த அதிகாரத்திற்கு அரசாங்கம் பணிந்து கொண்டிருக்கிறது. நம் நாடு மன்னர்களால் ஆளப்படவில்லை. ஆனால் இந்த நிலைமை நிச்சயமாக ஒன்றை அறிவுறுத்துகிறது. அவர்கள் நகரை ஆளும் ராஜா மற்றும் ராணி, நாங்கள் அனைவரும் அவர்களின் விதிகளை கடைபிடிக்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
பிலிப் என்பவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஒரு தொழிலதிபரின் தனிப்பட்ட நிகழ்வு எப்போது பொது நிகழ்வாக மாறியது? மும்பையின் ஒவ்வொரு குடிமகனும் இதற்கு அழைக்கப்படுகிறார்களா அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரா? பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, இதை பகலில் நடத்துவதற்கு பதில் இரவுக்கு மாற்றுமாறு ஏற்பாட்டாளர்களிடம் கூறியிருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb