ஒருவழியாக உலகின் முதல் சிஎன்ஜி பைக்கை ரிலீஸ் செய்து அசத்திவிட்டது பஜாஜ் நிறுவனம். இது வேறெந்த நிறுவனங்களும் செய்யாத சாதனை. ரூ.95,000 முதல் 1.05 லட்சம் மற்றும் 1.10 லட்சம் வரை எக்ஸ் ஷோரூம் விலைக்கு 3 வேரியன்ட்களை லாஞ்ச் செய்திருக்கிறார்கள். அதாவது சுமார் ஒண்ணே கால் லட்சம் ஆன்ரோடு விலைக்குள் இந்த ஃப்ரீடம் 125 சிஎன்ஜி பைக்கை வாங்கிவிடலாம். வெள்ளிக்கிழமை, மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை வைத்து இதை லாஞ்ச் செய்திருக்கிறார் பஜாஜ் தலைவர் ராஜிவ் பஜாஜ்.
1.5 டன் எடை கொண்ட கார்களில் சிஎன்ஜி ஃபிட்டிங்கைச் செய்துவிடுவது சுலபமாக இருக்கலாம். ஆனால், வெறும் 150 கிலோ எடைக்குள் சிஎன்ஜி டேங்க்கையும், பெட்ரோல் டேங்க்கையும் சேர்த்து ஃபிட் செய்து டிசைன் செய்வது மிகவும் சவாலான விஷயம். அதை அசால்ட்டாகச் செய்து முடித்து ஆட்டோமொபைல் இண்டஸ்ட்ரியில் இந்தியாவின் பெயரைத் தலைநிமிர வைத்திருக்கிறது பஜாஜ். 125 சிசி பைக் என்றால், 200 கிலோ எடையையும் தாண்டக் கூடாதல்லவா? அதிலும் சவால்தான். அப்படியென்றால், சிஎன்ஜிக்கான கொள்ளளவையும், பெட்ரோல் டேங்க் கொள்ளளவையும் குறைத்தால்தான் சாத்தியம். அதனால் இரண்டுக்குமே 2 லிட்டர் மற்றும் 2 கிலோ எனும் அளவுக்குக் கொள்ளளவில்தான் இதை ப்ளேஸ் செய்திருக்கிறார்கள். இதன் கெர்ப் எடையே வெறும் 149 கிலோதான். செமல்ல!
‛2 லிட்டர் பெட்ரோலையும், 2 கிலோ சிஎன்ஜியையும் வெச்சு எம்புட்டுத் தூரம் போக முடியும்’ என்பவர்களுக்கு பஜாஜ் இப்படிச் சொல்கிறது. ‛‛இரண்டையும் ஃபுல் செய்துவிட்டுப் பயணித்தால், சுமார் 330 கிமீ-க்கு மேல் போகலாம்’’ என்கிறது பஜாஜ். அதாவது – பெட்ரோலுக்கு 65 கிமீ-யும், சிஎன்ஜிக்கு ஒரு கிலோவுக்கு 102 கிமீ-யும் போகும் என்று க்ளெய்ம் செய்கிறது பஜாஜ்.
அது எல்லாம் ஓகேதான்! ஆனால், சிஎன்ஜி, எலெக்ட்ரிக் என்றாலே மக்கள் மத்தியில் ஒரு பயம் இருக்கிறதுதானே! அதற்கும் ஒரு பரீட்சை செய்து, அதை வீடியோவாகவும் வெளியிட்டு, மக்களைக் கொஞ்சம் ஆறுதல் படுத்தியிருக்கிறது பஜாஜ்.
ஆம், பொதுவாக கார்களுக்குத்தானே க்ராஷ் டெஸ்ட் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், முதன் முறையாக தனது பைக்குக்கு க்ராஷ் டெஸ்ட் செய்து அசத்தியிருக்கிறது பஜாஜ். இந்த சிஎன்ஜி டேங்க், கட்டுறுதியான ஸ்ட்ரெல்லிஸ் ஃப்ரேம் கொண்டு வடிவமைத்திருப்பதாகச் சொல்கிறது பஜாஜ். ஸ்ட்ரெல்லிஸ் ஃப்ரேம் என்பது கேடிஎம் பைக்கில் இருக்கும் கட்டுமானம். இந்த டேங்க்கை சீட்டுக்கு அடியில் பொருத்தியிருப்பது மக்களுக்கு இன்னும் பயத்தை வரவழைத்திருக்கிறது. சிஎன்ஜி டேங்க் லீக் ஆகுமா, விபத்தின்போது வெடிக்குமா என்று இதற்காகவே சுமார் 11 விதமான சோதனைகளை இந்த பைக்கில் செய்திருக்கிறதாம் பஜாஜ். அனைத்துப் பரீட்சைகளிலும் அவுட்ஸ்டாண்டிங் ஸ்டூடன்ட்டாக ஜொலித்திருக்கிறது ஃப்ரீடம் 125.
கார்களைப் போலவே Frontal Impact Test, Truck Run over Test, Side Impact Test, Vertical Drop Test என்று பல பரீட்சைகள் வைத்திருக்கிறது பஜாஜ். இதில் எல்லாவற்றிலும் பாஸ் ஆகியிருக்கிறதாம் ஃப்ரீடம் 125. அதில் முக்கியமான 2 டெஸ்ட்களை மட்டும் வீடியோ எடுத்து வைரல் ஆக்கியிருக்கிறது பஜாஜ்.
10 டன் எடை கொண்ட ட்ரக் ஒன்று, பைக்கில் ஏறி இறங்கும்போதும் – தனது சிஎன்ஜி டேங்க்கில் இருந்து கேஸ் லீக் ஆகாமல், டேங்க்கும் நசுங்காமல் இருப்பதாக ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறது பஜாஜ். டேங்க்கில் கொஞ்சம் ஸ்க்ராட்ச்சுகள் மட்டுமே விழுந்திருக்கிறதாம். வேறெந்த நிறுவனங்களும் இப்படி ஒரு டெஸ்ட்டைச் செய்ததில்லை என்றே சொல்லலாம்.
அதேபோல், பெரிய எஸ்யூவியின் எடை அளவுக்கு, சுமார் 1.5 டன் எடை கொண்ட ஒரு வாகனத்தில், சுமார் 60 கிமீ வேகத்தில் வந்து பைக்கை மோதவிட்டும் ஒரு டெஸ்ட் வைத்திருக்கிறார்கள். அப்போதும் சிஎன்ஜி டேங்க் அப்படியே ஆடாமல் அசையாமல் இருந்திருக்கிறது.
ஓகே பஜாஜ்! ரியல் டைமிலும் இந்த சிஎன்ஜி பைக் இப்படியே செயல்பட்டால், இதைவிட வாடிக்கையாளர்களுக்கு வேறென்ன மகிழ்ச்சி இருக்க முடியும்!