மாஸ்கோ: பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு பயணமாக ரஷ்யாவுக்கு சென்றுள்ளார். இந்நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) ரஷ்யாவில் வாழும் இந்தியர்களின் கூட்டத்தில் பங்கேற்று அவர் பேசினார்.
பிரதமர் மோடி பேசியதாவது: “நிர்ணயிக்கும் இலக்கை அடைவதை உறுதி செய்கிறது இன்றைய இந்தியா. உலகில் வேறு எந்த நாடும் சென்றடைய முடியாத நிலவின் பகுதிக்கு சந்திரயானை கொண்டு சென்ற நாடு இன்றைய இந்தியா. டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் நம்பகத்தன்மையை உலகுக்கு உணர்த்தியது இந்தியா. உலகின் மூன்றாவது பெரிய ஸ்டார்ட்அப் அமைப்பைக் கொண்ட நாடு இன்றைய இந்தியா.
2014-ல் முதன்முறையாக நாட்டுக்கு சேவை செய்ய நீங்கள் எனக்கு வாய்ப்பு தந்தீர்கள். அப்போது நூற்றுக்கணக்கான ஸ்டார்ட்அப்கள் இருந்தன. இன்று லட்சக்கணக்கான ஸ்டார்ட்அப்கள் உள்ளன. இப்படி பல்வேறு சாதனைகளை இந்தியா படைத்துள்ளது. இன்றைய இந்தியாவின் எழுச்சியை உலகமே கூர்ந்து கவனிக்கிறது.
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா கண்டுள்ள வளர்ச்சியை உலகம் வியந்து பார்க்கிறது. இந்தியா மாறிவிட்டது என்பதை இந்தியாவுக்கு வரும் உலக மக்கள் சொல்லி வருகின்றனர். இந்தியாவின் மாற்றத்தை அவர்கள் கண் முன்னே காண்கின்றனர். 40 ஆயிரம் கிலோ மீட்டர் ரயில் பாதை மின்மயம் ஆகியுள்ளது. உலகின் உயரமான ரயில் பாலம், உயரமான சிலையை இந்தியா நிறுவியுள்ளது.
இந்த மாற்றம் எப்படி நடக்கிறது என்றால் 140 கோடி மக்களின் ஆதரவை இந்தியா நம்புகிறது. உலகம் முழுவதும் வசித்து வரும் இந்தியர்களின் ஆதரவை நம்புகிறது. இந்தியாவை வளர்ந்த நாடாக உருவாக்க இந்தியர்கள் அனைவரும் விரும்புகிறார்கள். தாய்நாட்டின் சாதனையை எண்ணி மக்கள் பெருமை கொள்கிறார்கள். அனைத்து துறையிலும் சாதிக்கிறார்கள்.
கரோனா நெருக்கடியிலும் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் கண்டோம். இன்று உலக நாடுகளில் வலுவான பொருளாதார ஆதாரம் கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. உள்கட்டமைப்பு, சுகாதாரம் போன்றவற்றிலும் முன்னேற்றம் கண்டுள்ளோம். 2014-க்கு முன்னர் விரக்தியில் மூழ்கி இருந்தோம். ஆனால், இன்று தேசம் முழுவதும் தன்னம்பிக்கை அதிகரித்துள்ளது. அது நமது பலமான சொத்து. இளைஞர்கள் சாதித்து வருகிறார்கள். டி20 உலகக் கோப்பையை வென்றோம். பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு நம்பிக்கை அளிக்கும் வீரர்களை அனுப்பியுள்ளோம்.
செமிகன்டக்டர், மின்னணு பொருட்கள் உற்பத்தி, மின்சார வாகனம் என வணிக ரீதியாகவும் முன்னேற்றம் கண்டுள்ளோம். உலக அளவில் நிலவும் வறுமை தொடங்கி காலநிலை மாற்றம் வரையில் உரக்க பேசுகிறோம். சவாலான சூழலில் இந்தியா முதல் வரிசையில் நிற்கிறது.
பரஸ்பர நம்பிக்கை மற்றும் பரஸ்பர மரியாதையின் அடிப்படையில் இந்தியா – ரஷ்யா இடையிலான நட்பு ரீதியிலான உறவு கட்டமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு தருணங்களில் அது சோதனைக்கு உள்ளானது. அப்போதெல்லாம் இந்த நட்பின் பிணைப்பு மேலும் கூடியுள்ளது. எனது நண்பரும், அதிபருமான புதினை நான் பாராட்டுகிறேன். கடந்த 10 ஆண்டுகளில் நாங்கள் இருவரும் 17 முறை சந்தித்து உள்ளோம். நான் ஆறாவது முறையாக ரஷ்யா வந்துள்ளேன். நம் மாணவர்கள் இங்கு சிக்கி தவித்த போது ரஷ்யா உதவியுள்ளது. அந்த வகையில் ரஷ்யாவுக்கும், புதினுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
ரஷ்யாவில் இரண்டு இந்திய தூதரக அலுவலகத்தை நாம் நிறுவவுள்ளோம். இதனை இந்நேரத்தில் நான் உங்களிடம் தெரிவித்துக் கொள்கிறேன்” என பேசி இருந்தார். இதோடு மூன்றாவது முறையாக மத்தியில் என்டிஏ ஆட்சி அமைந்தது குறித்தும் பேசி இருந்தார். இது மிகவும் முக்கியமான கூட்டம் என இதில் பங்கேற்ற ரஷ்ய வாழ் இந்திய மக்கள் தெரிவித்தனர்.