விராட் கோலி மற்றும் அனுஷ்கா தம்பதிக்கு கடந்த ஜனவரி மாதம் ஆண் குழந்தை பிறந்தது. ஏற்கனவே இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் சமீப காலமாக அனுஷ்கா சர்மா அவரது இரண்டு குழந்தைகளான வாமிகா மற்றும் அகாய் உடன் லண்டனில் தான் வசித்து வருகிறார். அவரது இரண்டாவது குழந்தை கூட அங்கு தான் பிறந்தது. அதில் இருந்து அங்கேயே தான் இருந்து வருகின்றனர். சமீபத்தில் டி20 உலக கோப்பையை நேரில் காண மேற்கிந்திய தீவுகள் வந்திருந்தார் அனுஷ்கா சர்மா. டி20 உலக கோப்பையை வென்ற இந்திய அணி டெல்லிக்கு வந்தடைந்து பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தனர். பிறகு மும்பையில் பிசிசிஐ ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அன்று இரவே விராட் கோலி லண்டனுக்கு புறப்பட்டு சென்றார்.
இந்நிலையில், இவர்கள் இருவரும் நிரந்தரமாக லண்டனில் குடியேற போவதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. “விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா இருவரும் நிரந்தரமாக தங்கள் குழந்தைகளுடன் லண்டனில் செட்டில் ஆக உள்ளனர்” என்று சமூக வலைத்தளங்களில் செய்தி வைரலாக பரவி வருகிறது. டி20 உலக கோப்பையை வென்ற பிறகு விராட் கோலி டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து இருந்தார். மேலும் இந்திய கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு நீங்கள் என்னை சிறிது காலத்திற்கு பார்க்க முடியாது என்றும் முன்பே தெரிந்து இருந்தார் விராட் கோலி. ஆனாலும் தாங்கள் லண்டனில் குடியேறுவது குறித்து விராட் மற்றும் அனுஷ்கா எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.
விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா லண்டனில் குடியேறுவது குறித்து பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். “அவர்களால் இந்தியாவில் சாதாரண வாழ்க்கை வாழ முடியாது. ஆனால் லண்டன் அப்படி இல்லை, அது ஒரு அமைதியான நகரம். நல்ல கல்வி மற்றும் மருத்துவம் கிடைக்கும். சில ஆண்டுகளுக்கு முன்னர் விராட் மற்றும் அனுஷ்கா மும்பையில் சாலையில் பயணிப்பது போல வீடியோ வெளியானது. அதில் கூட பயந்து பயந்து செல்ல வேண்டி இருந்தது. எனவே லண்டன் போன்ற ஒரு நகரத்தில் அவர்களது தனியுரிமை பாதுகாப்பாக இருக்கும். விராட் கோலி இன்னும் 2 முதல் 3 ஆண்டுகளில் ஓய்வை அறிவிக்க உள்ளார். அனுஷ்கா சர்மா ஏற்கனவே திரையுலகில் இருந்து விடைபெற்று விட்டார். எனவே அவர்கள் லண்டனில் குடியேறுவது கிட்டத்தட்ட உறுதி தான்” என்று பதிவிட்டுள்ளார்.
மற்றொரு ரசிகர், ” அவர்கள் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் லண்டன் ப்ளே ஸ்கூலை பின்தொடர தொடங்கி உள்ளனர். ஒரேயடியாக இல்லை என்றாலும், சிறிது காலம் லண்டனில் குடிபெயர அதிக வாய்ப்புள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விராட் ஓய்வு பெற்றாலும், ஐபிஎல்லில் விளையாடுவார் என்பதால் இப்போதைக்கு அங்கு குடிபெயர வாய்ப்பு இல்லை” தெரிவித்துள்ளார். மற்றொரு ரசிகர், ” அவர்களுக்கு அவர்களது குழந்தையை எப்படி எங்கு வளர்க்க வேண்டும் என்பது தெரியும். அதில் தலையிட நாம் யார்? ஆரம்பத்தில் இருந்தே அவர்களது குழந்தைகளின் தனியுரிமையை அவர்கள் பாதுகாத்து வருகின்றனர். அவர்களது குழந்தை இந்தியாவில் ஒரு பொதுஇடத்தில் விளையாட வாய்ப்பு உள்ளதா? எனவே அவர்கள் வெளிநாடு செல்வது நியாயம் தான்” என்று தெரிவித்துள்ளார்.