ஈரோடு: வனப்பகுதியில் கிடந்த மனித எலும்புக்கூடு; கைதான தாய், மகன் – நடந்தது என்ன?

ஈரோடு மாவட்டம், தாளவாடியை அடுத்த தலமலை வனச்சரகத்துக்கு உட்பட்ட தொட்டாபுரம் அடர்ந்த வனப் பகுதியில் கடந்த மே மாதம் 26-ம் தேதி வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு ஒரு சாக்கு மூட்டை கிடந்துள்ளது. அதிலிருந்து துர்நாற்றம் வீசியதால் அது குறித்து தாளவாடி போலீஸூக்கு வனத்துறையினர் தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார் அந்த சாக்கு மூட்டையை பிரித்துப் பார்த்ததில் உள்ளே மனித எலும்புக் கூடு இருந்தது தெரியவந்தது. அதைக் கைப்பற்றிய போலீஸார், ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். மனித எலும்புகள் யாருடையது? யாராவது கொலை செய்யப்பட்டு சாக்கு மூட்டையில் கட்டி வனப்பகுதியில் வீசிச் சென்றனரா என பல்வேறு கோணங்களில் தாளவாடி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

கைது

இந்நிலையில், தொட்டாபுரம் கிராத்தைச் சேர்ந்த குமார் என்பவர் மாயமானதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இதனால் வனப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட எலும்புகள் குமாருடையதாக இருக்கலாம் என போலீஸார் சந்தேகித்தனர். அதைத் தொடர்ந்து குமாரை பற்றி தீவிர விசாரணையில் போலீஸார் ஈடுபட்டனர். இந்நிலையில் தொட்டாபுரம் பகுதியைச் சேர்ந்த நாகமல்லு என்பவர் தலமலை கிராம நிர்வாக அலுவலரிடம் குமாரை கொலை செய்ததாக கூறி சரணடைந்தார்.

பின்னர் அவரை தாளவாடி போலீஸாரிடம் நாகமல்லு ஒப்படைக்கப்பட்டார். நாகமல்லுவிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில், நாகமல்லுவும், அவரது தாய் முத்துமணியும் தொட்டாபுரம் தோட்டத்தில் வசித்து வந்துள்ளனர். அவரது தந்தை ராமசாமி மதுக் கடையில் பணிபுரிந்து வருகிறார். தனது தாய் முத்துமணிக்கும் குமாருக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதுபற்றி அவருக்கு தெரிய வந்ததும் குமாரை நாகமல்லு எச்சரித்துள்ளார். ஆனால், அவர்கள் இருவரும் தொடர்ந்து பழகி வந்துள்ளனர்.

கொலை

இந்த நிலையில் சம்பவத்தன்று நாகமல்லு தோட்டத்தில் இருந்தபோது குமார் அங்கு வந்துள்ளார். அப்போது, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. அதில், குமாரை கயிற்றால் கட்டி வைத்த நாகமல்லு காலையில் போலீஸிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளார். ஆனால், குமார் தொடர்ந்து அவரை தகாத வார்த்தையில் திட்டியுள்ளார். இதில், ஆத்திரமடைந்த நாகமல்லு சுத்தியால் குமார் தலையில் அடித்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கைது

இந்தக் கொலையை மறைக்க தனது பெரியப்பா மகன் மாதேவனை துனைக்கு அழைத்து குமார் உடலை மறைக்க திட்டம் தீட்டியிருக்கிறார். இதற்கு அவரது தாய் முத்துமணியும் உடந்தையாக இருந்துள்ளார். குமாரின் சடலத்தை சாக்கில் கட்டி அடர்ந்த வனப் பகுதியில் வீசி விட்டால், வனவிலங்குகள் தின்று விடும் என நினைத்து நாகமல்லுவும், மாதேவனும் தலைச்சுமையாக சடலத்தைக் கொண்டு சென்று வீசியுள்ளனர்.

“யாரும் எங்களை கண்டுபிடிக்கவில்லை என நினைத்து கொண்டிருந்தோம். ஆனால் கடந்த ஜூன் 26-ம் தேதி வனத்துறையினர் ரோந்து பணி சென்றபோது எலும்புகளை பார்த்து போலீஸாரிடம் தெரிவித்ததில் மாட்டிக் கொண்டோம்” என்று நாகமல்லு போலீஸில் தெரிவித்திருக்கிறார். இதைத் தொடர்ந்து நாகமல்லு, மாதேவன், முத்துமணி ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.