அண்ணன் – தம்பி பாசம், குடும்ப உறவுகள் குறித்த படம் என்றாலே இயக்குநர் ராசு மதுரவனின் ‘மாயாண்டி குடும்பத்தார்’ படமும் அந்த லிஸ்ட்டில் இடம்பிடித்துவிடும். கலங்கடிக்கும் காவியமாக இன்றளவும் கொண்டாடப்படும் படம் அது! பாராட்டுகளையும் வரவேற்பையும் குவித்த இயக்குநர் ராசு மதுரவன் அடுத்து `முத்துக்கு முத்தாக’ என்ற படம் மூலமும் கவனம் ஈர்த்தார். அவர் புற்றுநோயால் இறந்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஜூலை 9 அவரின் நினைவு நாள். அவரின் நினைவுகள் குறித்து அவரின் மனைவி பவானியிடம் பேசினோம்…
“என் கணவர் உயிரோடு இருந்திருந்தா எனக்கும் என் ரெண்டு பெண் குழந்தைகளுக்கும் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது. எங்க வாழ்க்கையே தினந்தினம் போராட்டத்துலதான் ஓடிக்கிட்டிருக்கு. எனக்கும் அவருக்கும் கடந்த 2005-ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஜீரோவிலிருந்துதான் எங்க வாழ்க்கையைத் தொடங்கினோம்.
வடிவேலு சாருக்கு என் கணவர் காமெடி ட்ராக் எழுதுவார். அதுல வர்ற வருமானத்தை வெச்சுத்தான் வீட்டு வாடகை எல்லாம் கட்டிக்கிட்டிருந்தோம். அப்புறம் அவர் இயக்கின ‘பாண்டி, ’மாயாண்டி குடும்பத்தார்’, ’கோரிப்பாளையம்’, ’முத்துக்கு முத்தாக’ படங்கள் ஹிட் அடிச்சு நாங்களும் பொருளாதார ரீதியா முன்னேற ஆரம்பிச்சோம்.
என் பொண்ணுங்க நேசிகா, அனிஷ்கா ரெண்டு பேருக்கும் அவரால முடியலைன்னாக்கூட என்னென்ன தேவையோ அத்தனையையும் செஞ்சு பார்த்துக்கிட்டார். ரெண்டு பேருக்குமே நல்ல கல்வியைக் கொடுக்கணும்னு விரும்பினார். அதற்கேற்ற மாதிரி நல்லா படிக்க வெச்சார். நல்லபடியா வாழ்க்கை போய்க்கிட்டிருக்கும்போதுதான் அவருக்குப் புற்றுநோய் வந்துடுச்சு. உயிரோட மீண்டு வந்துடுவார்ன்னுதான் நினைச்சேன்.
இறக்கிறதுக்கு முன்னாடி நாள் நைட்டுக்கூட ஒரு பாலிவுட் இயக்குநர் பேரைச் சொல்லி, ’அவர்கூட இறந்துடுவார்ன்னு டாக்டர் சொன்னாங்களாம். ஆனா, அவர் மீண்டு வந்து மூணு ஹிட்டு படங்கள் கொடுத்தாரு. அதேமாதிரி, மீண்டு வந்து ஹிட்டு படங்கள் கொடுப்பேன்’னு என்கிட்ட நம்பிக்கையோடு சொன்னார். நானும் டாக்டர் சொன்னதையெல்லாம் மைண்டுல ஏத்திக்காம கணவர் சொன்னதைத்தான் நம்பினேன். என் நம்பிக்கை பொய்யாகிப் போயிடுச்சு. இப்படி என் கணவருக்கு ஆகும்னு நினைச்சுகூடப் பார்க்கமுடியல.
அதுவரைக்கும் நாங்க சேர்த்து வெச்சிருந்த எல்லாமே அவரோட மருத்துவச் சிகிச்சைக்காக செலவாகிடுச்சு. அவர் இறக்கும்போது எங்ககிட்ட எதுவுமே இல்ல. ரெண்டு பெண் குழந்தைகளோடு நான் மதுரைக்கு வந்துட்டேன்.
பெரிய பொண்ணு நேசிகா ப்ளஸ் டூ படிக்கிறா. சின்ன பொண்ணு பத்தாவது படிக்கிறா. அப்பா இல்லாத ஏக்கம் ரெண்டு பேருக்குமே இருந்துக்கிட்டே இருக்கு. கூகுளில் அடிக்கடி அவங்க அப்பாவைப் பற்றின கட்டுரைகளை, செய்திகளை சர்ச் பண்ணி படிச்சுக்கிட்டே இருப்பாங்க. அந்தளவுக்கு அப்பா மேல பாசம். அவங்களுக்கு ஏதாவது வேணும்னா கூட குடும்ப கஷ்டத்தைப் பார்த்துக்கிட்டு கேட்கமாட்டாங்க.
அவர் இருக்கும்போது நான் வேலைக்கே போனதில்ல. அந்தளவுக்குப் பாசமா பார்த்துக்கிட்டாரு. அவர் ஒரு இயக்குநர் மாதிரியே நடந்துக்க மாட்டார். எனக்கு சமைச்சு கொடுப்பாரு. யாராவது வந்தாலும் டீ போட்டுக் கொடுப்பாரு. இயக்குநர்ங்கிற ஈகோவே பார்க்கமாட்டார். எனக்கும் அவருக்கும் சின்ன சண்டை வந்தாகூட சமாதானப்படுத்திட்டுத்தான் வெளியில போவாரு. ’உன் கூட அம்மா இல்ல, சொந்த பந்தம் யாரும் கூட இல்ல. நீ கோபமாவே இருப்ப. அதனாலதான் சமாதானப்படுத்துறேன்’னு சொல்லுவாரு. அவர்க்கிட்ட பிடிச்ச விஷயங்களே இதுதான். அதுதான் அவரோட படங்களிலும் வெளிப்பட்டது.
என்னோட மாமியார் இப்பவும் என் மேல அதே பாசத்தோட இருக்காங்க. பையன் இருந்திருந்தா என்னை நல்லா பார்த்திருப்பானேன்னு சொல்லி வருத்தப்பட்டுக்கிட்டே இருப்பாங்க. அவங்களும் ஏழ்மையான குடும்பம்தான். எங்க கொழுந்தனார் வீட்ல திண்டுக்கல்ல இருக்காங்க. எல்லோரும் விவசாய வேலைக்குத்தான் போய்க்கிட்டிருக்காங்க.
எங்க குடும்பத்தை நடத்துறதுக்குப் பொருளாதார ரீதியா உதவி செய்ய எங்களுக்கு யாருமே இல்ல. ஒரு பிரைவேட் ஸ்கூலில் கிண்டர் கார்டன் டீச்சரா வேலைக்குப் போய்க்கிட்டிருக்கேன். மாசம் 12,000 ரூபாய்தான் சம்பளம். அதுலதான் எங்களோட சாப்பாட்டுச் செலவு, ரெண்டு பொண்ணுங்களோட ஸ்கூல் ஃபீஸ் செலவுன்னு வாழ்வாதாரத்தை ஓட்டிக்கிறோம். இன்னும் சொல்லப்போனா, பிள்ளைங்களோட ஸ்கூல் ஃபீஸ் எல்லாம் கடன் வாங்கித்தான் கட்டிக்கிட்டிருக்கேன்.
என்னோட தெம்பு இருக்கிறவரைக்கும் என் பொண்ணுங்களைப் பார்த்துப்பேன். நானும் இல்லைன்னா என் பொன்ணுங்களோட நிலைமையை நினைச்சுக்கூடப் பார்க்க முடியல” என்று வேதனையுடன் பகிர்ந்துகொள்பவரிடம், ”சினிமா துறையிலிருந்து யாராவது உதவினார்களா?” என்று கேட்டபோது,
“இதுவரைக்கும் யாரும் எந்த உதவியுமே செஞ்சதில்ல. அவர், ஹாஸ்பிட்டலில் இருக்கும்போது மருத்துவச் செலவுக்குக்கூட யாருமே உதவல. இத்தனை வருசம் ஆச்சு. அவரோட இயக்கத்துல எத்தனையோ பேர் நடிச்சிருக்காங்க. ஆனா, யாருமே எங்களைத் தொடர்புகொண்டு எப்படி இருக்கீங்கன்னு நலம்கூட விசாரிக்கல. வீட்ல விழா வெச்சேன். மதுரையில இருக்கிறதால எல்லோருக்கும் வாட்ஸ்அப்புல இன்விட்டேஷன் அனுப்பினேன். ஸ்டில்ஸ் குமார் அண்ணா, சவுண்ட் இன்ஜினியர் கிருஷ்ணன், கணவர்கிட்டே உதவி இயக்குநரா இருந்த ராமுன்னு மூணே பேர்தான் வந்தாங்க. சீமான் அண்ணனுக்கும் போன் பண்ணினேன். அவர் எடுக்கல. அவரோட வாட்ஸ்அப் நம்பருக்கும் மெசேஜ் பண்ணினேன். ஆனா, அவர் பார்த்தாரா இல்லையான்னு தெரியல. சென்னைக்குப் போய் நேரடியா என்னால கொடுக்கவும் முடியல. கணவர் படங்கள்ல நடிச்ச பலர் நிறைய பேட்டியில அவரைப் பற்றிச் சொல்றாங்க. ஆனா, எங்க குடும்பத்தை யாரும் கண்டுக்கறதும் இல்லை; பேசுறதும் இல்லை. நாங்க எப்படியிருக்கோம்னுக்கூட தெரிஞ்சுக்க விரும்பல.
கணவர் உயிரோட இருந்தாதான் மதிப்பாங்க போலன்னு நினைச்சுக்கிட்டேன். இதுதான் சினிமா உலகம்னு புரிஞ்சிக்கிட்டேன். நான் அவங்கக்கிட்டே எனக்காக எதையும் எதிர்பார்க்கல. என் கணவர் பொண்ணுங்களை நல்லா படிக்க வெக்கணும்னு நினைச்சார். அவங்களோட கல்விக்காக யாராவது உதவினாலே போதும்” என்று கண் கலங்கி அழுகிறார் அவரது மனைவி.