மாஸ்கோ: “உங்கள் முழு வாழ்க்கையையும் உங்கள் நாட்டு மக்களுக்காக அர்ப்பணித்துள்ளீர்கள். இதனை இந்திய குடிமக்கள் நன்கு அறிவார்கள்” என்று மாஸ்கோவில் பிரதமர் மோடியை வரவேற்று ரஷ்ய அதிபர் புதின் பேசிய நிலையில், அதற்குப் பதிலளித்த மோடி, “நீங்கள் சொல்வது உண்மைதான். எனது ஒரே இலக்கு என் நாடும், நாட்டு மக்களும்தான்” என்று கூறியுள்ளார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்அழைப்பின் பேரில் பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் அரசுமுறைபயணமாக நேற்று மாஸ்கோ சென்றடைந்தார். விமான நிலையம் சென்றடைந்த அவரை அந்நாட்டு மூத்த துணைப் பிரதமர் டெனிஸ் மான்டுரோவ் வரவேற்றார். பின்னர் அந்நாட்டு பாரம்பரிய முறைப்படி ராணுவ மரியாதையும் சிவப்புகம்பள வரவேற்பும் வழங்கப்பட்டது.
மாஸ்கோ விமான நிலையம் சென்றடைந்த அவர், அங்கிருந்து புதினின் நோவோ-ஓகாரியோவோவில் உள்ள் அதிபர் இல்லத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
புதினின் வரவேற்புரைக்கு பதிலளித்து பிரதமர் மோடி கூறியதாவது: ஒரு நண்பரை அவரது இல்லத்தில் சந்திப்பது என்பது எப்போதுமே மகிழ்ச்சியானது. அப்படிப்பட்ட சுவாரஸ்யமான நிகழ்வை நீங்கள் ஏற்படுத்திக் கொடுத்ததற்காக நான் நன்றி கூறிக் கொள்கிறேன். தங்களுடைய இதமான வார்த்தைகளுக்கு நான் நன்றியுரைக்கிறேன்.
நீங்கள் சொல்வது உண்மைதான். இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு. ஜனநாயகத்தின் தாயகமாக இருக்கிறது. ஆகையால், இந்திய தேர்தல் மிகவும் முக்கியமானது. இத்தேர்தலில் 65 கோடி மக்கள் வாக்களித்தனர். கடந்த 60 ஆண்டுகளில் முதன்முறையாக தொடர்ச்சியாக 3வது முறை ஓர் அரசு ஆட்சியைப் பிடித்துள்ளது. அதற்கு முன்னதாக ஜவஹர்லால் நேரு அச்சாதனையை செய்திருந்தார். 60 ஆண்டுகளுக்குப் பின்னர் எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்திய மக்கள் என் தாய்நாட்டுக்கு சேவை செய்ய எனக்கு இன்னொரு வாய்ப்பைக் கொடுத்துள்ளனர்” என்றார்.
முன்னதாக, பிரதமர் மோடியை வரவேற்று பேசிய ரஷ்ய அதிபர் புதின், “மீண்டும் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உங்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது தற்செயலானது அல்ல என்று நான் நினைக்கிறேன். இது உங்கள் நாட்டின் தலைவராக நீங்கள் பல ஆண்டுகளாக உழைத்ததன் பலன்.
உங்களிடம் சொந்த யோசனைகள் உள்ளன. நீங்கள் மிகவும் ஆற்றல் மிக்க நபர். இந்தியா மற்றும் இந்திய மக்களின் நலன்கள் குறித்த முடிவுகளை எவ்வாறு எடுப்பது என்பது உங்களுக்குத் தெரியும். அதன் விளைவுகள் வெளிப்படையானவை. பொருளாதார அடிப்படையில் இந்தியா நம்பிக்கையுடன் உலகின் மூன்றாவது இடத்தில் உள்ளது.
உங்கள் முழு வாழ்க்கையையும் உங்கள் நாட்டு மக்களுக்காக அர்ப்பணித்துள்ளீர்கள். இதனை இந்திய குடிமக்கள் நன்கு அறிவார்கள்” என்று கூறியிருந்தார்.