ராஜமுந்திரி: ஆந்திராவில் ஜெகன் ஆட்சி செய்தது எமர்ஜென்சி காலத்தை நினைவு படுத்தியது என ஆந்திர மாநில பாஜக தலைவரும், எம்.பி.யுமான புரந்தேஸ்வரி குற்றம் சாட்டியுள்ளார்.
ஆந்திராவில் உள்ள ராஜமுந்திரியில் நேற்று பாஜகவின் மாநில செயற்குழு கூட்டம் எம்பி புரந்தேஸ்வரி தலைமையில் நடந்தது. இதில் எம்பி புரந்தேஸ்வரி பேசியதாவது: ஜெகன்மோகன் ரெட்டியின் ஆட்சியில் ஆந்திராவில் பல இந்து கோயில்கள் இடிக்கப்பட்டன.
மக்கள் மேலும் பல இன்னல்களுக்கு ஆளாயினர். இதனால் அவரது ஆட்சி எமர்ஜென்சி காலத்தை நினைவுபடுத்தியது. தற்போது தெலுங்கு தேசம்-பாஜக கூட்டணி ஆட்சி அமலில் உள்ளது. இந்த ஆட்சியில் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும்.
கடந்த 2019-ல் நடந்த மக்களவைதேர்தலில் பாஜகவுக்கு 23 கோடிவாக்குகள் கிடைத்தன. 2024-ல் 24கோடி வாக்குகள் வந்துள்ளன.எதிர்க்கட்சிகளின் துஷ்பிரச்சாரம்காரணமாகவே சில தொகுதிகளில் தோல்வியை சந்திக்க வேண்டி வந்தது. அம்பேத்கரை காங்கிரஸார் அவமதித்து வருகின்றனர். பாஜகவினர் அவரை போற்றி வருகின்றனர். மத்திய அரசு ஆந்திராவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இவ்வாறு பாஜக தலைவர் புரந்தேஸ்வரி பேசினார்.
இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் எல். முருகன், நிவாஸ் வர்மா, பாஜக தேசிய பிரதான செயலாளர் அருண் சிங், மாநில அமைச்சர் சத்யகுமார், பாஜக எம்பி, எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.