சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய பலி தொடர்பான விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக் கோரி வால்பாறை முன்னாள் எம்எல்ஏ-வான டாக்டர் ஸ்ரீதரனும் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.
கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சம்பவம் தொடர்பாக அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ ஐ.எஸ்.இன்பதுரை, பாமக சார்பில் வழக்கறிஞர் கே.பாலு, பாஜக சார்பில் வழக்கறிஞர் ஏ.மோகன் தாஸ் ஆகியோர் சிபிஐ விசாரணை கோரி ஏற்கெனவே உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகளைத் தொடர்ந்துள்ளனர். இந்த வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், வால்பாறை முன்னாள் எம்எல்ஏ-வான டாக்டர் ஸ்ரீதரனும் கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கையும் ஏற்கெனவே நிலுவையில் உள்ள வழக்குகளுடன் சேர்த்து விசாரிக்க வேண்டுமெனக் கோரி வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி பொறுப்பு தலைமை நீதிபதி ஆர். மகாதேவன், நீதிபதி முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் ஆஜராகி முறையீடு செய்தார். அதையேற்ற நீதிபதிகள், இந்த வழக்கும் மற்ற வழக்குகளுடன் சேர்த்து விசாரிக்கப்படும் எனக் கூறியுள்ளனர்.