மராட்டியம்: கார் மோதி பெண் பலியான விவகாரம்; மதுபான பாருக்கு கலால் துறை சீல்

ஒர்லி,

மராட்டியத்தில் மதுபான பாரை மூடுவதற்கான காலக்கெடு மற்றும் கலால் துறை விதிகளை மீறும் பார்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மராட்டியத்தின் ஒர்லி நகரில் கொலிவாடா பகுதியில் வசித்து வருபவர் பிரதீப் நகவா (வயது 50). இவருடைய மனைவி காவேரி நகவா (வயது 45). கடந்த ஞாயிற்று கிழமை காலை 5.30 மணியளவில் இவர்கள் இருவரும் ஸ்கூட்டர் ஒன்றில் மீன் வாங்க சென்றனர்.

இந்நிலையில், அவர்கள் மீன் வாங்கி கொண்டு திரும்பி வரும்போது, பின்னால் வந்த பி.எம்.டபிள்யூ. ரக கார் ஒன்று இவர்களுடைய ஸ்கூட்டர் மீது மோதி விபத்து ஏற்படுத்தியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். பிரதீப் தரையில் விழுந்த நிலையில், காவேரி காரில் 100 மீட்டர் தொலைவு வரை இழுத்து செல்லப்பட்டு உள்ளார்.

அவர் பின்னர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும் அவர் உயிரிழந்து விட்டார் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், காரை குடிபோதையில் ஓட்டி சென்றது முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியின் துணை தலைவர்களில் ஒருவரான ராஜேஷ் ஷா என்பவரின் மகன் மிஹிர் ஷா (வயது 24) என்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சம்பவம் நடந்ததும் அவர் தப்பியோடி விட்டார். இதுபற்றி ராஜேஷ் ஷா மற்றும் அவருடைய கார் ஓட்டுநர் ராஜரிஷி ராஜேந்திர சிங் பிஜாவத் ஆகியோரை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று போலீசார் விசாரித்து வருகிறார்கள். 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

சம்பவத்தன்று, ஜுகுவில் உள்ள பார் ஒன்றில் மிஹிர் ஷா மதுபானம் குடித்து இருக்கிறார். அவர் வீடு திரும்பும்போது, ஓட்டுநரிடம் நீண்ட தொலைவுக்கு காரை ஓட்டி செல்லும்படி கூறியுள்ளார். கார் ஒர்லிக்கு வந்ததும், காரை ஓட்டுகிறேன் என மிஹிர் கூறியுள்ளார். அதன்பின்னர் காரை அதிவிரைவாக ஓட்டி சென்ற மிஹிர் ஸ்கூட்டர் மீது மோதியுள்ளார்.

இந்த சம்பவம் துரதிர்ஷ்டவசம் வாய்ந்தது என கூறியுள்ள முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, சட்டம் அதன் கடமையை செய்யும். சட்டத்தின் முன் அனைவரும் சமம். போலீசாரிடம் பேசியுள்ளேன். கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

இந்த விபத்துக்கு பின் மிஹிர் ஷா தப்பியோடி விட்டார். அவருக்கு, அவருடைய காதலி அடைக்கலம் கொடுத்திருக்க கூடும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அவர் தப்பி, ஒளிந்து கொள்ள உதவியிருக்க கூடும் என்றும் போலீசார் சந்தேகம் தெரிவித்து உள்ளனர்.

இந்நிலையில், இந்த சம்பவம் பற்றி பார் உரிமையாளர் கரண் ஷா கூறும்போது, மிஹிர் ஷாவுடன் அவருடைய நண்பர்கள் 4 பேர் வந்தனர். அவர்கள் அனைவரும் பீர் குடித்த பின்னர் இயல்பான நிலையில் இருந்தனர் என்றார். சி.சி.டி.வி. காட்சிகளை போலீசார் கைப்பற்றி சென்றுள்ளனர் என கூறியுள்ளார்.

இந்நிலையில், விபத்து ஏற்படுத்திய மிஹிர் ஷா சென்ற, தனியார் மதுபான பாருக்கு கலால் துறையினர் சீல் வைத்து மூடியுள்ளனர்.

ஜுகுவில் உள்ள இந்த பாரின் உரிமையாளர்கள், கலால் துறையின் விதிகளை காற்றில் பறக்க விட்டனர் என்பது 2 நாள் விசாரணைக்கு பின்னர் தெரிய வந்ததும், இந்த பாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. குடித்து விட்டு, வாகனம் ஓட்டுபவர்களுக்கு எதிராக கடுமையாக நடவடிக்கை எடுக்கும்படி மும்பை போலீசாருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

பாரை மூடுவதற்கான காலக்கெடு மற்றும் கலால் துறை விதிகளை மீறும் பார்கள் மூடப்படுவதுடன், அவற்றின் உரிமங்கள் திரும்ப பெறப்படும் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த விபத்து நடப்பதற்கு முன், நண்பர்களுடன் சேர்ந்து பாரில் மிஹிர் ஷா செலவிட்ட தொகை ரூ.18 ஆயிரம் என தெரிய வந்துள்ளது. அதற்கான பில் தொகையை மிஹிர் ஷாவின் நண்பர் செலுத்தி உள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.