புதுடெல்லி: இந்த ஆண்டு கோடை விடுமுறையில் உச்ச நீதிமன்றம் 1,170 வழக்குகளை தீர்த்து வைத்து சாதனை படைத்துள்ளது.
கோடை விடுமுறைக்குப் பிறகு உச்ச நீதிமன்றம் நேற்று முதல் வழக்கம்போல் செயல்படத் தொடங்கியது. அடுத்த சிலவாரங்களில் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வுகள் தீர்ப்புகளை அறிவிக்க உள்ளன.
நிர்வாகப் பணிகளைக் கையாளுவது, இந்தியாவிலும் வெளிநாட்டிலும் மாநாடுகளில் பங்கேற்பது ஆகிய பணிகளுக்கு மத்தியிலும் தலைமை நீதிபதி சந்திரசூட், தனது தலைமையிலான அமர்வுகளில் ஒத்திவைக்கப்பட்ட 18 வழக்குகளுக்கு தீர்ப்புகளுக்கான பணியில் ஈடுபட்டு வருகிறார். இதுபோல பிற நீதிபதிகள் ஒத்திவைக்கப்பட்ட 190 வழக்குகளில் தீர்ப்புகளுக்கான பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நீண்ட கோடை விடுமுறை என்ற ஆங்கிலேயர் கால மரபு உச்ச நீதிமன்றத்தில் இப்போதும் தொடர்கிறது. ஆனால் முதன்முறையாக இந்த ஆண்டு கிட்டத்தட்ட இரண்டுமாத இடைவெளியில் 20 அமர்வுகள் அமைக்கப்பட்டு, இரு தரப்பு ஒப்புதலுடன் பல வழக்குகள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன.
உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் பணி அட்டவணை பற்றி அறியாதவர்கள், இந்தநீண்ட கோடைவிடுமுறையை விமர்சிப்பதுண்டு. இதுகுறித்து தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறும்போது, “உச்ச நீதிமன்றத்தில் நாங்கள் தினமும் காலை 10.30 மணி முதல் மாலை 4 மணி வரை அமர்ந்து 40 முதல் 60 வழக்குகளை கையாளுவதை மக்கள் பார்க்கிறார்கள். ஆனால் மறுநாள் விசாரணைக்கு வரும் வழக்குகளுக்கு தயாராவதற்காக நாங்கள் உழைக்கும் நேரத்தின் சிறு பகுதிதான் இது. ஒவ்வொரு நீதிபதியும் அடுத்த நாள் வழக்கு கோப்புகளைப் படிக்க சமமான நேரத்தை செலவிடுகின்றனர். வேலை நாட்களில் தீர்ப்புகள் ஒத்தி வைக்கப்படுகின்றன. சனிக்கிழமைகளில் ஒவ்வொரு நீதிபதியும் தீர்ப்புகளை தயாரிக்கின்றனர். ஞாயிற்றுக்கிழமைகளில், நாங்கள் அனைவரும் மறுநாள் பட்டியலிடப்படும் வழக்குகளை படிக்கிறோம். எனவே ஒவ்வொரு நீதிபதியும் வாரத்தில் ஏழுநாட்களும் வேலை செய்கிறோம்” என்றார்.
2023-க்கு முந்தைய 6 ஆண்டுகளில் விடுமுறைக் கால அமர்வில் சராசரியாக 1,380 வழக்குகள் பட்டியலிடப்பட்டுள்ளன. 2023 மற்றும் 2024-ல் முறையே 2,261 மற்றும் 4,160 வழக்குகள் பட்டியலிடப்பட்டுள்ளன. 2017ல் இது 2,261 ஆக உயர்ந்துள்ளது.
இதுபோல் 2013-க்கு முந்தைய ஆண்டுகளில் ஒவ்வொரு கோடை விடுமுறைக்கும் சராசரியாக 461 வழக்குகள் தீர்த்து வைக்கப்பட்டன. 2023-ல் 751 வழக்குகளை உச்ச நீதிமன்றம் தீர்த்து வைத்தது. இந்த ஆண்டு இது 1,170 ஆக உயர்ந்துள்ளது.
இது, 2017-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது கிட்டத்தட்ட 3 மடங்காகும். இதுதவிர இந்த ஆண்டு 1,157 விவகாரங்களில் நோட்டீஸ் அனுப்ப விடுமுறைக் கால அமர்வுகள் உத்தரவிட்டுள்ளன.