`20 வயசுல கணவரை இழந்தேன்; இப்போ பொண்ணு படிப்பையும் இழந்துடுவேனோனு…' – உதவிக்குத் தவிக்கும் தாய்!

பேராவூரணி அருகே உள்ள தொண்டுபுளிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் சின்னம்மாள், வயது 40. இவரின் கணவர் ராஜா. இவர்களுக்கு ஐஸ்வர்யா, விக்னேஷ்வரன் என இரண்டு பிள்ளைகள். தேங்காய் உரிக்கும் கூலித்தொழிலாளியான ராஜா, மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு திடீரென இறந்து விட்டார். கணவர் இறப்புக்குப் பிறகு குடும்பத்துக்கு ஆதாரம் இல்லாமல், இரண்டு பிள்ளைகளுடன் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் தவித்த சின்னம்மாளுக்கு, ஆறுதல் சொல்லவோ, உதவிக்கரம் நீட்டவோ யாருமில்லை. அதுவரை வீட்டை விட்டு வேறு எதுவும் அறியாதவர், பிள்ளைகளை ஆளாக்கும் பொறுப்பை ஏற்றார்.

வேலை செய்கின்ற கம்பெனியில் சின்னம்மாள்

சிமென்ட் தொட்டி தயாரிக்கும் கம்பெனியில் கூலி வேலைக்கு சேர்ந்தார். பிள்ளைகளுக்குப் பசியாற்றினார். அவர்களது நல் எதிர்காலம் மட்டுமே ஒரே எண்ணமாக இருந்தது சின்னம்மாளுக்கு. அவர் பிள்ளைகளும், அம்மாவின் கஷ்டத்தை அறிந்து பொறுப்பாக வளர்ந்தனர்.

சின்னம்மாளின் மகள் ஐஸ்வர்யா, ப்ளஸ் டூ பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்தார். மகள் விரும்பிய படிப்பை படிக்க கல்லூரியில் சேர்த்தார் அவர். தன்னைப்போல் மகள் கஷ்டப்படக்கூடாது, படித்து எப்படியாவது கரைசேர்ந்துவிட வேண்டும் என்ற வைராக்கியத்தில், வறுமை தைத்த அத்தனை முள்களையும் தாங்கினார்.

தற்போது ஹோமியோபதி மருத்துவம் மூன்றாம் ஆண்டு படிக்கிறார் ஐஸ்வர்யா. ஆனால், கல்லூரிக்கான கட்டணம் கட்ட வழியில்லாததால் படிப்பை தொடர முடியாத நிலைக்கு ஆளாகியிருக்கிறார். மகள் எதிர்காலம் கானல் நீராகக் கலைந்துவிடுமோ என்ற கலக்கத்தில் நிலைகுலைந்துபோயுள்ளார் சின்னம்மாள்.

கணவர் இறந்த பிறகு கண்ணுக்கு எட்டும் தூரம் வரை இருட்டாகி வெளிச்சம் படாமல் எந்தச் சூழலில் நின்றாரோ, இப்போது மீண்டும் அப்படி ஒரு சூழலில் வாழ்க்கை சின்னம்மாளை நிறுத்தியிருக்கிறது. அவரது நிலை குறித்து தெரியவர, அவர் வேலை செய்கின்ற கம்பெனிக்கு சென்றோம்.

ஒடிந்த தேகமும், கண்களில் வழிந்தோடும் கண்ணீரை துடைத்த காட்சியுமாக நம்மிடம் பேசத் தொடங்கினார் சின்னம்மாள்.

‘’என் வீட்டுக்காரர் 2011-ல திடீர்னு இறந்துபோயிட்டார். அப்ப எனக்கு 20 வயசுதான். என் பொண்னுக்கு அஞ்சு வயசு, மகனுக்கு ரெண்டு வயசு. சோத்துக்கே வழியில்லாம ரெண்டு பிள்ளைகளோட தவிச்சு நின்னேன். என்ன, ஏதுனு எங்களைக் கேக்கக்கூட யாரும் இல்ல.

வாழ்க்கையே இருட்டாகிட்டாலும், என் புள்ளைங்கள எப்படியாச்சும் ஆளாக்கி வெளிச்சத்துக்கு அனுப்பிடணும்னு மனசுக்குள்ள வைராக்கியத்தை வளத்துக்கிட்டேன். ’தென்னந்தோப்புக்குள்ள இருக்கிற குடிசை வீட்டுல இருந்துக்க. தோப்பை கவனிச்சுக்கிட்டா போதும், வாடகை கொடுக்க வேண்டாம்’னு ஒரு வேலை கிடைக்க, இருக்க எங்களுக்கு ஒரு எடம் கிடைச்சது. தோப்புல வேலையை முடிச்சிட்டு சிமென்ட் கம்பெனிக்கு வேலைக்குப் போக ஆரம்பிச்சேன்.

மகளை பள்ளிக்கூடத்துல விட்டுட்டு, மகனை இடுப்புல தூக்கிட்டு வேலைக்குப் போகும்போதுலாம், நான் ரொம்பப் பாவம்னு எனக்கே தோணும். ஆனாலும் மனசை விடாம அப்படியே தொடர்ந்து ஓட ஆரம்பிச்சேன். வருஷங்கள் ஓடுச்சு. என் கூலிக்காசுல புள்ளைங்களுக்கு பசி தெரியாம, படிப்பு கெடாம வளர்த்துட்டேன்.

நான் அஞ்சாவதுதான் படிச்சிருக்கேன். என் மகளை நெறையா படிக்கவைக்கணும்னு நெனச்சேன். அவ படிப்புல சமத்து. பள்ளிக்கூடம் இல்லாத நாள்ல என்கூட கூலிவேலைக்கு வருவா. பத்தாவது, ப்ளஸ் டூல நல்ல மார்க் எடுத்தா. ஏதோ ஒரு படிப்பு பேரை சொல்லி, அதை படிக்கணும்னு கேட்டா. அதுலயெல்லாம் நமக்கு சீட்டு கிடைக்குமானு கேட்டேன். ‘நான் மார்க் எடுத்துட்டேன்ம்மா… ஆனா காசு கட்டணுமே…’னு மருகுச்சு புள்ள.

என்னால எவ்வளவு முடியுமோ அவ்வளவு முயற்சி பண்ணி, அவளை காலேஜுல சேர்த்துட்டேன். தகுதிக்கு மீறி மகளை படிக்க வைக்கிறானு பலரும் பேசினாங்க. படிக்க அறிவுதானே தகுதி? அது இருக்கு என் மககிட்ட. காசை எப்பாடுபட்டாவது ஏற்பாடு பண்ணிடலாம்னு எனக்கு ஒரு நம்பிக்கை. மகளிர் குழு, அங்க இங்க வாங்குன கடன், என் சம்பாத்தியம்னு மூச்சைப் பிடிச்சு எப்படியோ ரெண்டு வருஷம் படிக்க வெச்சுட்டேன்.

பேராவூரணி

இப்பயெல்லாம், எனக்கு முன்னாடி மாதிரி வேலை இருக்கிறதில்ல. இன்னொரு பக்கம், வாங்குன கடனுக்கு வட்டி கட்ட வேண்டியது இருக்கு. ஃபீஸ் கட்ட முடியலை. ரெண்டாவது வருஷத்துக்கான ஃபீஸை கட்டிமுடிச்சப்போவே கண்ணு முழியெல்லாம் வெளிய வந்தாப்ல, மறுபிறவி எடுத்தாப்ல இருந்துச்சு. அப்பாடாங்குறதுக்குள்ள இப்போ மூணாவது வருஷம் வந்துடுச்சு. இதுவரை ஃபீஸ் கட்ட முடியல.

ஃபீஸ் கட்டுனதுக்கு அப்புறம், மகளை காலேஜுக்கு வர சொல்லிட்டாங்க. கையிலயும் காசு இல்ல, இனி கடன் கொடுக்கவும் யாரும் இல்ல. வீட்டுக்காரர் இல்லாம 14 வருஷம் எப்படியோ போராடி பிள்ளைகளை இதுவரை வளத்துட்டேன். இப்போ, இதுக்கு மேல என்னால முடியலையேனு அழுகையா வருது.

மகன் ப்ளஸ் டூ படிக்கிறான். காலேஜ் லீவு விட்டா, பொண்ணு எங்கூட வேலைக்கு வந்து என் சுமையைக் குறைப்பா. இப்போ ஃபீஸ் கட்ட முடியாததால வீட்டுல இருக்குறவ, நானும் உன் கூட வேலைக்கு வந்துடட்டுமானு கேட்குறா. எனக்கு உசுரே போயிடுச்சு. பட்ட பாடெல்லாம் வீணா போயிருமோனு பெத்த மனம் பதறுது, கலங்குது.

மக படிப்பு பாதியில நின்னுடுமா, இதுக்கா நாங்க இவ்வளவு கஷ்டப்பட்டோம்னு மனசு ஒடிஞ்சு போய் கிடக்குறோம். சின்ன வயசுலயிருந்தே என் பொண்ணு ரொம்ப கஷ்டத்தை பார்த்துட்டா. படிச்சா அவ தலையெழுத்து மாறிடும்னு காத்துக்கிடந்தேன். இப்போ, இப்படி ஒரு இடி விழுந்துகிடக்கோம். என் பொண்ணை எப்படியாச்சும் கரை சேர்த்துட வழியிருக்குமா…’’ – அதுவரை கட்டுப்படுத்திய கண்ணீர் அதற்கு மேல் அடக்கமுடியாமல் வழிய ஆரம்பிக்க, கண்களை அழுந்தத் துடைத்துக்கொண்டார் சின்னம்மாள்.

அவர் மகள் ஐஸ்வர்யாவிடம் பேசினோம். ‘’அஞ்சு வயசுல, எங்க அப்பா இறந்ததை பார்த்தேன். கொரோனா காலத்துல, என்னை மாதிரியே பல பிள்ளைங்களும் அப்பா, அம்மா இல்லாம ஆனதை பார்த்தேன். நோய்னாலதானே இத்தனை உயிர்களை இழக்குறோம், நம்மாள முடிஞ்சவரை காப்பாத்துவோம், அதுக்கு டாக்டருக்கு படிக்கணும்னு எண்ணம் வந்தது அப்போதான். ஆனா அதை சொன்னாக்கூட, ‘உனக்கெல்லாம் இந்த ஆசை தேவையா?’ங்கிற மாதிரியே பலரும் பேசுவாங்க. நாங்கயெல்லாம் டாக்டராகணும்னு நினைக்கக்கூடக் கூடாதானு தோணும்.

மகளுக்கு கல்லூரி பீஸ் கட்டமுடியாமல் தவிக்கும் சின்னம்மாள்

ப்ளஸ் டூ முடிச்சப்போ, விருதுநகர் மாவட்டத்துல இருக்கிற தமிழ்நாடு எலக்ட்ரோ ஹோமியோபதி மெடிக்கல் காலேஜ்ல பி.இ.எம்.எஸ் (Bachelor of Electrohomeopathy medicine and surgery) படிக்க இடம் கிடைச்சது.

ரெண்டு வருஷம் எப்படியோ கடந்துட்டோம். இப்போ அம்மா காசுக்கு படுற பாட்டையெல்லாம் பார்க்கும்போது, படிப்பு மேல உள்ள ஆசையில அம்மாவோட கஷ்டத்தை நினைச்சுப் பார்க்காம விட்டுட்டோமோனு அழுகையா வருது. இப்பவே அம்மாவுக்கு ரெண்டு லட்சத்துக்கும் மேல கடன் இருக்கு. இனி என்னை எப்படி படிக்க வைக்கப் போறாங்கனு தெரியல. பாதி கிணறை தாண்டிட்டோம், முழுசா தாண்டுவோமானு தெரியல.

இந்த வருஷத்துக்கு காலேஜ் ஃபீஸ், ஹாஸ்டல் ஃபீஸ் எல்லாத்தையும் சேர்த்து சுமார் ரூ. 1 லட்சம் செலவாகும். எனக்கு விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து அம்மா ஓடிக்கிட்டேதான் இருக்காங்க. நான் படிக்கணும்ங்கிறதுதான் அந்த மனுஷிக்குள்ள இருக்கிற ஒரே தவிப்பு.

ஏதாச்சும் உதவி கிடைச்சு, எப்படியாச்சும் நான் படிப்பை முடிச்சுட்டா, எங்க குடும்பத்துக்கே வெளிச்சம் கிடைச்சிடும். 20 வயசுல கணவரை இழந்து ரெண்டு புள்ளைங்களோட போராட்டத்தை ஆரம்பிச்ச எங்க அம்மாவோட வைராக்கியத்துக்கு ஒரு அர்த்தம் கிடைக்கணும். எங்களுக்கு ஒரு வழி கிடைக்குமா…’’ – ஐஸ்வர்யாவின் வார்த்தைகளையும் கண்ணீர் துளிகள் தடைபோட்டு நிறுத்தின.

உதவும் மனம் கொண்டோர், துன்பங்களை மட்டுமே பார்த்த இந்தக் குடும்பத்துக்கு கைக்கொடுப்பார்களா?!

வாசகர்களின் கவனத்துக்கு…

ஐஸ்வர்யாவுக்கு உதவ விருப்பம் தெரிவிக்கும் வாசகர்கள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொண்டு வங்கிக் கணக்கு உள்ளிட்ட விவரங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.