வாகனங்கள் என்பது அந்தஸ்தின் அடையாளமாக மாறிவிட்ட இன்றைய காலகட்டத்தில், விலையுயர்ந்த கார்களின் விற்பனை சக்கைபோடு போடுகிறது. கார்களை வாங்குவதற்கு மட்டுமல்ல, அதற்கான பதிவு எண்ணை வாங்கவும் பணம் செலவு செய்ய பலர் தயாராக உள்ளனர். இதற்காக மாதாமாதம் ஏலமும் விடப்படுகிறது. விஐபி நம்பர் பிளேட் வாங்குவதற்கான ஏலத்தில் தங்களுடைய விருப்பப்பட்ட அல்லது ராசியான எண்ணை வாங்குவதற்கு எவ்வளவு பணம் கொடுக்கலாம்?
இந்தக் கேள்விக்கான பதில் சாமானியர்களுக்கு ஆயிரம் ரூபாயாக இருக்கலாம், வேண்டுமானால் அதிகபட்ச விலை எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும், ஆனால் ஆடம்பர சொகுசுக்காரின் விலையைவிட அதிக பணம் செலவழிக்கலாம் என்று சாமானிய நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் நினைப்பார்களா? இந்தக் கேள்விக்கு இல்லை என்ற பதில் தான் வரும்.
விருப்பப்பட்ட எண்ணை வாங்க பிரீமியம் எஸ்யூவி கார் உரிமையாளர்கள் லட்சக்கணக்கில் செலவழிக்கின்றனர். அதிலும் 0001 என்ற எண்ணின் மதிப்பு எவ்வளவு என்று தெரிந்தால், பணமே கொடுக்காமல் ஒரு காலத்தில் இந்த எண்ணை வாங்கிய நமது தாத்தாவுக்கு ஹார்ட் அட்டாக்கே வந்துவிடும்.
0001 கார் எண் விலை
ஃபேன்ஸி நம்பர் பிளேட் அல்லது விஐபி நம்பர் பிளேட் என்று அழைக்கப்படும் கார் எண்களின் மீதான மோகம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த பிரீமியம் விஐபி நம்பரைப் பெற லட்சக்கணக்கான ரூபாய்களைக் கூட கொடுக்க சில பணக்காரர்கள் தயாராக உள்ளனர். மார்ச் மாதம் நடந்த ஏலத்தில், 0001 என்ற கார் எண் ரூ.23.4 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டது. இந்த தொகையில் இரண்டு சொகுசு ஹேட்ச்பேக் கார்களையோ, நல்ல எஸ்யூவியையோ வாங்கியிருக்கலாம்.
0001 என்ற எண்ணின் முக்கியத்துவம்
இந்த ஆண்டு ஜூன் வரை விஐபி எண்களின் மாதாந்திர ஏலத்தில் 0001 என்ற எண் அதிக ஏலத்தில் எடுக்கப்பட்டது. மார்ச் மாதத்தில் அதன் ஏலத்தொகை ரூ.23.4 லட்சமாக இருந்தது. ஆனால், இந்த எண்ணை வாங்குபவரின் தகவல்களை அரசாங்கம் வெளியிடவில்லை. 0009 என்ற எண் ஜூன் மாதத்தில் ரூ.11 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டு இரண்டாவது இடத்தைப் பிடித்தது. 0007 என்ற எண்ணும் ஜனவரி மாதம் நடந்த ஏலத்தில் ரூ.10.8 லட்சத்துக்கு விற்கப்பட்டு நல்ல விலையைப் பெற்றுள்ளது.
டெல்லி அரசின் போக்குவரத்துத் துறையின் தரவுகளின்படி, இந்த ஆண்டு இதுவரை நடந்த எண் 0001-க்கான ஏலம் ரூ.23.4 லட்சம் ஆகும். ஏலத்தில் ஆரம்ப விலை ரூ.5 லட்சம் என்று நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், யாருமே இந்த அளவு ஏலத்தொகையை கேட்பார்கள் என்பதை யாருமே எதிர்பார்க்கவில்லை.
0001 என்ற ஃபேன்ஸி எண்ணை பெரிய தலைவர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் என விஐபிகள் மட்டுமே வாங்குவதால் இந்த எண் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது. இந்த எண் அரிதாகவே ஏலத்திற்கு வருகிறது, அதனால்தான் அதன் விலை மிகவும் அதிகமாக இருக்கிறது.
எண் 0007
ஆன்லைன் மூலம் வாகன ஏலத்தில் 0001 என்ற எண்ணுக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படுகிறது, அதிலும் குறிப்பாக அரசியல்வாதிகள் மத்தியில் இது பெருமைக்குரிய விஷயமாக கருதப்படுகிறது. இதேபோல், 0007 என்ற எண்ணும் மிக அதிக ஏலத்திற்கு எடுக்கப்படுகிறது. இது ரகசிய முகவர் ஜேம்ஸ் பாண்ட் மற்றும் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியுடன் தொடர்புடையதாக நம்பப்படுகிறது. ஜனவரி ஏலத்தில் 0002 என்ற எண்ணுக்கு ரூ.5.1 லட்சத்தை துறை பெற்றிருந்தது.
அதிக ஏலத்திற்கு எடுக்கப்படும் பேன்சி எண்கள்
0002 முதல் 0009 வரை உள்ள எண்களின் ஆரம்ப விலை ரூ.3 லட்சம் என போக்குவரத்துத் துறை நிர்ணயித்துள்ளது. 0010 முதல் 0099, 0786, 1000, 1111, 7777 மற்றும் 9999: இந்த எண்களின் ஆரம்ப விலை ரூ.2 லட்சம் என்றும், 0100, 0111, 0300, 0333 போன்ற எண்கள்: இந்த எண்களின் ஆரம்ப விலை ரூ.1 லட்சம் என்றும் நிர்ணயிக்கப்படுள்ளது. வேறு சில எண்களின் விலை சுமார் ரூ.25,000 ஆக இருக்கிறது, அதில்
இஸ்லாமியர்கள் மத்தியில் பிரபலமான 0786 என்ற எண்ணும் அடங்கும்.