வியன்நா,
22வது இந்தியா – ரஷியா உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்திய பிரதமர் மோடி நேற்று முன் தினம் ரஷியா சென்றார். அங்கு அவர் ரஷிய அதிபர் புதினை சந்தித்தார். இதன் பின்னர், நேற்று நடந்த இந்தியா – ரஷியா உச்சி மாநாட்டில் இருநாட்டு தலைவர்களும் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் இருநாட்டு உறவு, வர்த்தகம், ராணுவம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசித்தனர். பின்னர், உக்ரைன் போர் குறித்தும் விவாதித்தனர்.
இதையடுத்து ரஷிய பயணத்தை முடித்த பிரதமர் மோடி அங்கிருந்து ஆஸ்திரியா புறப்பட்டு சென்றார். விமானம் மூலம் ஆஸ்திரியா சென்ற பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின்னர், ஆஸ்திரியா அதிபர் அலெக்சாண்டர் வான்டர் பெல்லன் மற்றும் பிரதமர் கார்ல் நெகம்மரை இந்திய பிரதமர் மோடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்நிலையில், ஆஸ்திரியா சென்றுள்ள பிரதமர் மோடிக்கு வியன்னாவில் உள்ள அதிபர் மாளிகையில் அந்நாட்டு பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து ஆஸ்திரிய அதிபர் மாளிகையில் இரு நாட்டு தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். முன்னதாக, 41 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரியா சென்ற பிரதமர் மோடிக்கு வந்தே மாதரம் பாடலை இசைத்து அந்நாட்டு அரசு வரவேற்பு அளித்தது குறிப்பிடத்தக்கது.