வியன்னா: ஆஸ்திரியாவில் அந்நாட்டு பிரதமர் கார்ல் நெகம்மரைச் சந்தித்துப் பேசிய பிரதமர் மோடி, உக்ரைன் – ரஷ்யா விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து எடுத்துரைத்தார். அப்போது, ‘இது போருக்கான நேரம் அல்ல’ என்ற தனது முந்தைய கருத்தை மீண்டும் அவர் உறுதிப்படுத்தினார்.
ரஷ்ய பயணத்தை முடித்துக்கொண்டு இரண்டு நாள் பயணமாக நேற்றிரவு (செவ்வாய்க்கிழமை) ஆஸ்திரியா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆஸ்திரியா பிரதமர் கார்ல் நெகம்மர், பிரதமர் மோடியை ஆரத்தழுவி வரவேற்றார். மேலும், பிரதமர் மோடியோடு செல்ஃபி எடுத்துக்கொண்டார். ஆஸ்திரியாவில் உள்ள இந்தியர்கள் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். ஆஸ்திரிய இசைக் குழு ஒன்று, வந்தே மாதரம் பாடலை பிரதமர் மோடியின் முன் பாடி அவரது பாராட்டைப் பெற்றது.
இதையடுத்து, இன்று (புதன்கிழமை) காலை, ஆஸ்திரியா பிரதமர் கார்ல் நெகம்மரை, பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது, இரு தரப்பு உறவை மேம்படுத்துவது முதல் உக்ரைன் – ரஷ்யா போர் வரை பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதித்தனர். இதனைத் தொடர்ந்து, இரு தலைவர்களின் முன்னிலையில், இரு தரப்பு உறவை மேலும் மேம்படுத்துவதற்கான ஒப்பந்தங்கள் தொடர்பாக இரு நாடுகளின் உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதையடுத்து, பிரதமர் மோடியும், ஆஸ்திரிய பிரதமர் கார்ல் நெகம்மரும் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய பிரதமர் மோடி, “பிரதமர் நெகம்மரும் நானும் மிகவும் பயனுள்ள பேச்சுவார்த்தையை நடத்தினோம். இரு நாடுகளுக்கு இடையேயான பரஸ்பர ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான புதிய சாத்தியக்கூறுகளை நாங்கள் கண்டறிந்துள்ளோம். எங்கள் உறவுக்கு ஓர் அடிப்படையான திசையை வழங்க முடிவு செய்துள்ளோம். வரும் பல பத்தாண்டுகளுக்கான ஒத்துழைப்புக்கான வரைபடம் தயாரிக்கப்பட்டது.
உக்ரைன் மோதலாக இருந்தாலும் சரி அல்லது மேற்கு ஆசியாவின் சூழ்நிலையாக இருந்தாலும் சரி, உலகம் முழுவதும் நடந்து வரும் மோதல்கள் குறித்து அதிபர் நெகம்மரும் நானும் நீண்ட நேரம் பேசினோம். இது போருக்கான நேரம் அல்ல என்று நான் முன்பே கூறியுள்ளேன். போர்க்களத்தில் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாது. இந்தியாவும் ஆஸ்திரியாவும் பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரத்தை வலியுறுத்துகின்றன. அதற்கு தேவையான எந்த ஆதரவையும் வழங்க தயாராக இருக்கிறோம்.
இந்தியா மற்றும் ஆஸ்திரியா ஆகிய இரு நாடுகளும் பயங்கரவாதத்தை கடுமையாக கண்டிக்கின்றன. அது எந்த வடிவத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்பதை ஒப்புக்கொள்கிறோம். பயங்கரவாதத்தை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.
எனது மூன்றாவது பதவிக்காலத்தின் தொடக்கத்திலேயே ஆஸ்திரியாவுக்கு வரும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். என்னுடைய இந்த பயணம் வரலாற்று சிறப்புமிக்கது. 41 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆஸ்திரியா வந்துள்ள இந்திய பிரதமர் நான். ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி போன்றவற்றில் உள்ள நம்பிக்கையே இந்தியா – ஆஸ்திரியா உறவுகளுக்கு வலுவான அடித்தளம். பரஸ்பர நம்பிக்கை மற்றும் பரஸ்பர நலன்கள் எங்கள் உறவுகளை வலுப்படுத்துகின்றன. ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பிற சர்வதேச நிறுவனங்களை காலத்துக்கு ஏற்பவும், பயனுள்ள வகையிலும் சீர்திருத்த நாங்கள் ஒப்புக்கொண்டிருக்கிறோம்” என்று தெரிவித்தார்.
ஆஸ்திரிய பிரதமர் கார்ல் நெகம்மர் கூறும்போது, “ரஷ்யா – உக்ரைன் அமைதி நடவடிக்கையில் இந்தியாவின் பங்கு முக்கியமானது. இந்தியா ஒரு செல்வாக்கு மிக்க நாடு. ரஷ்யா-உக்ரைன் இடையே அமைதி ஏற்படுவதில் அதன் பங்கு முக்கியமானது. அமைதிக்கான பேச்சுவார்த்தையை ஆஸ்திரியாவில் நடத்த விரும்பினால், நடுநிலை நாடு என்ற வகையில் அதற்கான தளத்தை வழங்க எங்கள் நாடு தயார். உக்ரைனுக்கு எதிரான ரஷ்ய ஆக்கிரமிப்பு பற்றி நாங்கள் தீவிர பேச்சுவார்த்தையை நடத்தினோம். என்னைப் பொறுத்தவரை, இந்த விவகாரத்தில் இந்தியாவின் மதிப்பீட்டை, அதன் புரிதலை தெரிந்துகொள்வதும், ஐரோப்பாவின் கவலைகளை பகிர்வதும் மிகவும் முக்கியம்.
ரஷ்யா – உக்ரைன் தொடர்பாக ஜூன் மாதம் நடைபெற்ற சுவிஸ் அமைதி மாநாட்டில் பிரிக்ஸ் அமைப்பின் நிறுவன உறுப்பினராக இந்தியா பங்கேற்றது ஒரு முக்கியமான சமிக்ஞை. இன்று, நாங்கள் இன்னும் வலுவான அர்ப்பணிப்பு மற்றும் அமைதி செயல்முறையை புதுப்பிக்கும் சாத்தியக்கூறுகள் பற்றி ஆராய்கிறோம். பிரதமர் மோடியும் நானும் உலகளாவிய தெற்கு என்று அழைக்கப்படும் இந்தியாவின் தனித்துவமான நிலை குறித்து விவாதித்தோம். இந்தியா ஒரு முக்கியமான, செல்வாக்கு மிக்க மற்றும் கடன் பெற தகுதியான நாடு. இந்தியா உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு. எனவே, அமைதிக்கான உச்சிமாநாடுகளில் இந்தியா பங்கு வகிப்பது ஆஸ்திரியாவுக்கு முக்கியமானது” என்று தெரிவித்தார்.