இலங்கையில் பால் மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளை ஒழிப்பதற்காக பல்துறைசார் தேசிய செயற்பாட்டுத் திட்டம் – ii (2024- 2028) இனை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
மகளிர், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கே இவ்வாறு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான 2024.07.09 அன்று நடைபெற்ற அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:
இலங்கையில் பால் மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளை ஒளிப்பதற்காக பல்துறைசார் தேசிய செயற்பாட்டுத் திட்டம் ii (2024-2028)
வன்முறையற்றதும் நீதியானதுமான சமூகச் சூழலில் பெண்கள், ஆண்கள், சிறுவர்கள் மற்றும் பாலநிலையில் பன்மைத்துவம் கொண்ட குழுக்கள் வாழ்வதற்கான உரிமையை உறுதிப்படுத்துவதற்காக கொள்கை ரீதியான இடையீடுகள் தேவையென இலங்கையில் பால் மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளை ஒழிப்பதற்கான முதலாவது செயற்பாட்டுத்திட்டம் 2012 2020 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஒருங்கிணைந்த அணுகுமுறையுடன் கூடியதாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த செயற்பாட்டுத் திட்டத்தின் விளைவுகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட தொடராய்வு மற்றும் மதிப்பீட்டுச் செயன்முறையில் புதிய தேசிய செயற்பாட்டுத் திட்டத்தை வகுத்துக் கொள்ள வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, ஏற்புடைய அனைத்து பங்குதார நிறுவனங்களின் கருத்துக்களைக் கேட்டறிந்து தயாரிக்கப்பட்டுள்ள இலங்கையில் பால் மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளை ஒழிப்பதற்காக பல்துறைசார் தேசிய செயற்பாட்டுத் திட்டம் – ii (2024- 2028) இனை நடைமுறைப்படுத்துவதற்காக மகளிர், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.