உலககோப்பை வெல்லாமல் போனதால் நான் அதிர்ஷ்டம் இல்லாதவனா? டிராவிட் கொடுத்த பதில்

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட், இப்போது முழுமையாக கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றிருக்கிறார். ஆனால் அவர் ஏதேனும் ஒரு ஐபிஎல் அணிக்கு எதிர்வரும் சீசனில் ஆலோசகராக செயல்படும் வாய்ப்பு இருக்கிறது. இப்போதைக்கு முழுமையாக கிரிக்கெட்டில் இருந்து விலகியிருக்கும் அவர், தன்னை அதிர்ஷ்டம் இல்லாதவர் என்று கூறப்படும் விமர்சனங்களுக்கு சிம்பிளாக பதில் அளித்துள்ளார். இது குறித்து அவர் பேசும்போது, ” நான் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடினேன். முழுமையான பங்களிப்பை கொடுத்தேன். இருப்பினும் நான் வீரராக விளையாடும்போது இந்திய அணி உலகக்கோப்பையை வெல்லவில்லை. அதற்காக நான் அதிர்ஷ்டம் இல்லாதவன் என்று கிடையாது.

என்னுடைய தொழிலை, விளையாட்டை மிகவும் அனுபவித்து சிறப்பாக விளையாடினேன். அந்தளவில் என்னை நான் பெருமையாகவே கருதுகிறேன். கிடைக்கவில்லை  என்பது வருத்தமாக இருந்தாலும், அதிர்ஷ்டம் இல்லை என்பதை ஏற்றுக் கொள்ளமாட்டேன். இப்போது டி20 உலகக்கோப்பை வென்ற அணியில் நானும் ஒரு அங்கமாக இருந்திருக்கிறேன். அதுவே எனக்கு உளப்பூர்வமாக மகிழ்ச்சியளிக்கிறது. ரோகித் சர்மா ஒரு கேப்டனாக, நல்ல மனிதராக என்னோடு இணைந்து செயல்பட்டார். அவருக்கும், இந்திய அணி நிர்வாகத்துக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி, மிக்க மகிழ்ச்சியோடு இந்திய அணியுடனான பயணத்தை நான் நிறைவு செய்திருக்கிறேன்” என ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

மேலும், பிசிசிஐ கொடுத்த பரிசுத் தொகையையும் ராகுல் டிராவிட் முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை. உலகக்கோப்பை வென்ற அணியில் இடம்பிடித்தவர்களுக்கும் தலைமை பயிற்சியாளருக்கும் பிசிசிஐ தலா 5 கோடி ரூபாய் பரிசு அறிவித்தது. மற்ற பயிற்சியாளர்கள் உள்ளிட்டோருக்கு தலா 2.5 கோடி ருபாய் பரிசு தொகையே கொடுக்கப்பட்டது. இது குறித்து பிசிசிஐக்கு டிராவிட் கொடுத்திருக்கும் கோரிக்கையில் மற்ற  பயிற்சியாளர்களுக்கு என்ன ஊக்கத் தொகை அறிவிக்கப்பட்டிருக்கிறதோ, அதே பரிசுத் தொகையை மட்டும் தனக்கு கொடுக்குமாறு தெரிவித்துள்ளார். அதாவது அவருக்கும் 2.5 கோடி ரூபாய் பரிசுத் தொகை கொடுத்தால் போதும் என தெரிவித்துள்ளார். 

டிராவிட்டின் இந்த அறிவிப்பு பிசிசிஐ மற்றும் ரசிகர்கள் உள்ளிட்டோரை நெகிழ்சியடைய செய்துள்ளது. டிராவிட் இப்போது பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகிக்கொண்டதால், கவுதம் கம்பீர் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரை பயிற்சியாளராக தொடருமாறு பிசிசிஐ மற்றும் ரோகித் சர்மா தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டபோதும் அதனை ராகுல் டிராவிட் ஏற்றுக் கொள்ளவில்லை. உலகக்கோப்பை வெற்றியே எனக்கு மன நிறைவை தருவதாக கூறி அந்த வாய்ப்பை நிராகரித்திருக்கிறார் ராகுல் டிராவிட். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.