இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார். டி20 உலகக்கோப்பையுடன் ராகுல் டிராவிட் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகிக் கொண்டதால், புதிய பயிற்சியாளரை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தேர்வு செய்துள்ளது. இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஒருநாள் உலககோப்பை போட்டியில் இந்திய அணி இறுதிப் போட்டியில் தோல்வியை தழுவியதுமே இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ராகுல் டிராவிட் விலகிக் கொள்வதாக தெரிவித்துவிட்டார். ஆனால் ரோகித் சர்மாவின் வற்புறுத்தலின்பேரில் பயிற்சியாளர் பொறுப்பை தொடர ஒப்புக் கொண்ட டிராவிட், டி20 உலகக்கோப்பை ரை பயிற்சியாளராக தொடர்வதாக ஒப்புக் கொண்டார்.
டி20 உலகக்கோப்பை 2024 தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றவுடன், சாம்பியன்ஸ் கோப்பை வரை பயிற்சியாளர் பதவியில் தொடருமாறு ராகுல் டிராவிட்டிடம் ரோகித் சர்மா கேட்டுக் கொண்டார். ஆனால் இதற்கு மேல் என்னால் முடியவே முடியாது என ராகுல் டிராவிட் தெரிவித்துவிட, கவுதம் கம்பீரை இப்போது அந்த பொறுப்புக்கு கொண்டு வந்திருக்கிறது பிசிசிஐ. அவர் முழுநேர தலைமை பயிற்சியாளராக இலங்கை தொடரில் இருந்து பொறுப்பேற்றுக் கொள்ள இருக்கிறார். அவரின் வருகை இந்திய அணியின் சீனியர் பிளேயர்களுக்கு ஒருவித நெருடலை ஏற்படுத்தியுள்ளது. இளம் வீரர்களுக்கு, ஒரு கெடுபிடியான டீச்சர் வரப்போகிறார் என்ற பயம் ஏற்பட்டுள்ளது. அதற்கு கவுதம் கம்பீரின் பாலிசியே காரணம்.
கவுதம் கம்பீரின் பாலிசி
கவுதம் கம்பீரைப் பொறுத்தவரை தனிநபர் ஆட்டம், ரெக்கார்டுகள் எல்லாம் பொருட்டே இல்லை. அணியின் வெற்றிக்கு பங்களிப்பு செய்யும் வகையில் களத்தில் ஒவ்வொரு வீரரும் விளையாட வேண்டும். தனிப்பட்ட புகழுக்காக அல்லது ரெக்கார்டுகளுக்காக விளையாடினால், அவர் இனி இந்திய அணியில் இடத்தை கனவில் கூட நினைத்து பார்க்கக்கூடாது. ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு ஆலோசகராக இருந்தபோது கூட கவுதம் கம்பீர் இந்த பாலிசியையே கடைபிடித்தார். அத்துடன் ஒவ்வொரு டீம் மீட்டிங்கிலும் இதனை வெளிப்படையாகவே அறிவித்துவிட்டார். கம்பீரின் இந்த மந்திரம் விராட் கோலிக்கு கொஞ்சம் கூட பிடிக்காது.
விராட் கோலிக்கு ஏன் பிடிக்காது?
ஏனென்றால், கவுதம் கம்பீர், விராட் கோலி ஆகியோருக்கு இடையே நல்லுறவு என்பது இல்லவே இல்லை. இருவரும் டெல்லியைச் சேர்ந்தவர்கள் என்றாலும் விராட் கோலியின் நடத்தையை கம்பீர் ஒருபோதும் ரசித்தது இல்லை. இதனால் கிரிக்கெட் களத்துக்குள்ளேயே பலமுறை நேருக்கு நேர் சண்டையிட்டு இருக்கிறார்கள். பல பேட்டிகளிலும் விராட் கோலியின் நடத்தையை கவுதம் கம்பீர் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். அப்படி இருக்கும்போது கம்பீர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பை ஏற்று, அவருடைய வழிநடத்தலின்கீழ் விராட் கோலி ஆட வேண்டிய சூழல் ஏற்பட்டிருப்பதால், இந்த முரண் எப்படி சுமூகமான சூழலாக இருவருக்கும் இருக்கும்? என யோசிக்க வேண்டியுள்ளது.
அதனால், விராட் கோலியின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் ஆகிய சர்வதேச கிரிக்கெட் சர்வதேச பயணம் இனி அதிக நாட்களுக்கு நீடிக்க வாய்ப்பில்லை என்றே கருதப்படுகிறது. அதிகபட்சம் எதிர்வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் மற்றும் ஒருநாள் போட்டியில் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய இரண்டும் விராட் கோலியும் கடைசி சர்வதேச கிரிக்கெட் தொடர்களாக இருக்கும் என கிரிக்கெட் நிபுணர்கள் கணித்துள்ளனர்.