மும்பையில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் பால்கர் பிரிவு தலைவராக இருக்கும் ராஜேஷ் ஷா என்பவரது மகன் மிஹிர் ஷா, கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் மது போதையில் கார் ஓட்டி இரு சக்கர வாகனத்தின்மீது மோதினார். இதனால் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்த காவேரி என்ற பெண் காரில் 1.5 கிலோமீட்டர் இழுத்துச்செல்லப்பட்டு உயிரிழந்தார். இவ்விபத்தை ஏற்படுத்திய மிஹிர் மூன்று நாள்களுக்கு பிறகு நேற்றுதான் கைது செய்யப்பட்டார். 24 வயது நிரம்பிய மிஹிர் ஷா மும்பை ஜுகுவில் உள்ள பப் ஒன்றில் மது அருந்தினார். மகாராஷ்டிரா சட்டப்படி 25 வயது நிறைந்தவர்தான் இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபானங்களான விஸ்கி, ரம், ஓட்கா போன்றவற்றை குடிக்க கொடுக்க முடியும். ஆனால் மிஹிருக்கு 24 வயதுதான் ஆகிறது.
எனவே கலால் வரித்துறை அதிகாரிகள் மிஹிருக்கும் அவரது நண்பர்களுக்கும் மது சப்ளை செய்த பப்பை பூட்டி சீல் வைத்துள்ளனர். மது அருந்த பெர்மிட் இல்லாதவர்களுக்கு மது வழங்கியது உட்பட பல்வேறு விதிமுறை மீறல்களில் ஈடுபட்டதாக கூறி பப் சீல் வைக்கப்பட்டுள்ளது. அதோடு மும்பை மாநகராட்சி அதிகாரிகள் பப்பில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட பகுதியை இன்று புல்டோசர் உதவியுடன் இடித்து தள்ளினர். ஜுகு சர்ச் எதிரில் இருக்கும் வைஸ்-குளோபல் தபாஸ் பாரில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட பகுதிகளை மாநகராட்சி அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். அதனை தொடர்ந்து இன்று இடிக்கப்பட்டது. புனேயிலும் கடந்த மே மாதம் இது போன்று பார் இடிக்கப்பட்டது.
மகன் மதுபோதையில் விபத்தை ஏற்படுத்தியதால் தந்தை ராஜேஷ் ஷாவின் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது. கட்சி தலைமை ராஜேஷ் ஷாவை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது. ராஜேஷ் ஷா தனது மகன் விபத்தை ஏற்படுத்திய பிறகு தப்பித்துச் செல்ல உதவியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.