கார் வாங்கினால் 3.5 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி! ஹைபிரிட் காருக்கு சலுகை!

வாகனங்கள் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறதே தவிர ஒருபோதும் குறையப்போவதில்லை. ஆனால் இதனால் சுற்றுச்சூழல் மாசு அதிகரித்து வருகிறது. மாசுபாட்டைக் குறைக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டாலும், அதில் முக்கியமான ஒன்று மின்சார வாகன பயன்பாடு. பெட்ரோல் பயன்பாட்டை குறைக்கவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

அதில் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, உத்தரபிரதேச அரசு மாநிலத்தில் ஹைபிரிட் கார் வாங்குபவர்களுக்கு ஒரு ஜாக்பாட் சலுகையை யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு அறிவித்துள்ளது. ஜூலை 5 முதல், ஹைபிரிட் கார்களுக்கான பதிவுக் கட்டணத்தை மாநில அரசு தள்ளுபடி செய்துள்ளது. இது உத்தரபிரதேசத்தில் ஹைபிரிட் கார்களை வாங்கும் மக்களுக்கு மகிழ்ச்சியைத் தருவதாக உள்ளது.

 மாநிலத்தில் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாகனங்களை வாங்க மக்களை ஊக்குவிப்பதில் கவனம் காட்டும் உத்திரப் பிரதேச மாநில அரசு பதிவுக் கட்டணத்தில் தள்ளுபடியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த தள்ளுபடியால், மாருதி, ஹோண்டா மற்றும் டொயோட்டா கார்களை வாங்குபவர்களுக்கு ரூ.3.50 லட்சம் வரை மிச்சமாகிறது.

உத்தரப்பிரதேசத்தில் வாகனங்களுக்கு விதிக்கப்படும் கட்டணம்
பயணிகள் வாகனத் துறையில் தனிநபர்களின் வாகன விற்பனை அதிகமாக் இருக்கும் சந்தைகளில் ஒன்றாக உத்திரப் பிரதேசத்தின் வாகனச் சந்தை உள்ளது. ரூ.10 லட்சத்துக்கும் குறைவான வாகனங்களுக்கு 8% சாலை வரியும், ரூ.10 லட்சத்துக்கும் அதிகமான வாகனங்களுக்கு 10% சாலை வரியையும் உத்திரப் பிரதேச மாநில அரசு விதிக்கிறது.  

 2024 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் (ஜனவரி முதல் ஜூன்), வாகன விற்பனை 13.5 சதவீதம் அதிகரித்து 2.36 லட்சமாக இருந்தது. இது சில்லறை வாகன விற்பனையில் மட்டும் தான். இந்த நிலையில் பதிவுக் கட்டண ரத்து என்ற முடிவைத் தொடர்ந்து மாருதி சுஸுகியின் ஹைபிரிட் வாகனங்களுக்கான தேவை அதிகரிக்கும் என உத்தரப் பிரதேச மாநில கார் விற்பனை டீலர்கள் எதிர்பார்க்கின்றனர். கடந்த ஆண்டு, மாருதி சுசுகியின் 1,000 யூனிட் கிராண்ட் விட்டாரா மற்றும் இன்விக்டோ கார்கள் உத்தரப்பிரதேசத்தில் விற்பனையாகின.  

உத்தரப் பிரதேச அரசின் பதிவுக் கட்டண தள்ளுபடியால் எந்த காருக்கு எவ்வளவு செலவு குறையும்? என்பதைத் தெரிந்துக் கொள்வோம். கிராண்ட் விட்டாரா காரின் விலை ரூ 18.4 லட்சம், இதன் பதிவுக் கட்டணம் ரூ 2 லட்சம் என்ற நிலையில், சுமார் இரண்டு லட்ச ரூபாய் சேமிக்கலாம். இன்விக்டோ காரின் விலை ரூ 25.2 லட்சம், இந்தக் காரை வாங்குபவர்களுக்கு பதிவுக் கட்டணம் ரூ 3 லட்சம் தள்ளுபடியாகும். 

உத்தரபிரதேச அரசாங்கத்தின் இந்த முயற்சியானது, ஹைபிரிட் வாகனங்களை மக்கள் வாங்குவதற்கு ஊக்குவிக்கும் முயற்சியாகும். கார் வாங்குபவர்களுக்கு பணம் மிச்சம் என்றால், மாநிலத்திற்கு பதிவுக்கட்டணம் வாங்காதது வருவாயைக் குறைக்கும். ஆனால், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான முயற்சியில் உறுதுணையாக இருக்கும். எனவே, அரசின் இந்த பதிவுக்கட்டண தள்ளுபடி முடிவானது இரு தரப்பினருக்கும் நன்மைகளைக் கொடுக்கிறது.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.